பள்ளிகளில் மும்மொழி கொள்கையை நடைமுறைப்படுத்த வேண்டுமென்ற கஸ்தூரி ரங்கன் கமிட்டி அறிக்கைக்கு தமிழ்நாட்டில் கடும் எதிர்ப்பு எழுந்த சூழலில், இம்மாநிலத்தில் இந்தி படிக்கும் மாணாக்கர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது என்ற உண்மையையும் கவனிக்க வேண்டியுள்ளது.
தமிழகத்தில் புற்றீசல்போல உருவாகியிருக்கும் சிபிஎஸ்இ இணைப்புப்பெற்ற பள்ளிகள் இதற்கு முக்கிய காரணம் என்று கருதப்படுகிறது. இதன்படி, மாணாக்கர்கள் ஒரு மொழியை விரும்பிக் கற்பதற்கும், அதே மொழி அவர்களின் மீது திணிக்கப்படுவதற்கும் உள்ள வித்தியாசம் புலப்பட்டுள்ளது.
மேலும் கடந்த 1918ம் ஆண்டு தென்னிந்தியாவில் இந்தி மொழியைப் பிரபலப்படுத்த உருவாக்கப்பட்ட தக்ஷிண பாரத் இந்தி பிரச்சார் சபா மூலமாக, தாமாக விரும்பி இந்திப் படிக்கும் மாணாக்கர் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது.
தமிழ்நாட்டில் சமச்சீர் கல்வி அறிமுகம் செய்யப்பட்டதன் வாயிலாக, நல்ல கல்வித் திட்டம் என்ற பெயரில் மாநிலமெங்கும் பெருகிய சிபிஎஸ்இ பள்ளிகள், இந்தி மொழி பரவலுக்கு முக்கிய காரணம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தற்போதைய நிலையில், மாநிலத்தில் 950 பள்ளிகள் நிரந்தர சிபிஎஸ்இ இணைப்புப் பெற்றதாயும், 1000 பள்ளிகள் தற்காலிக இணைப்புப் பெற்றதாயும் செயல்படுகின்றன.