மும்பை,

புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த பழம்பெரும் இந்தி நடிகர் வினோத் கண்ணா இன்று மரணமடைந்தார். அவருக்கு வயது 70.

பி.காம்., பட்டதாரியான வினோத்கன்னா 1946ம் ஆண்டு பஞ்சாப் மாநிலத்தில் பிறந்தவர். 1968-ம் ஆண்டு சுனில் தத் நடித்த “மான் கா மீட்” என்ற படத்தின் மூலம் வில்லனாக சினிமாவில் அறிமுகமானார்.

சுமார் 130-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கும் வினோத் கன்னா அவ்வப்போது வில்லன் வேடங்களிலும் நடித்து தனி முத்திரை பதித்தவர்.

அதைத்தொடர்ந்து அரசியலிலும் கால் பதித்தார். பாரதியஜனதமா கட்சியில் இணைந்து,  பஞ்சாப் மாநிலம், குர்தாஸ்பூர் தொகுதி, பா.ஜ.க எம்.பியாக உள்ளார்.

சமீபத்தில் உடல் நலக்குறைவால், மும்பையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். உடலில் நீர் சத்து குறைந்ததால், பாதிக்கப்பட்டார் என்று கூறப்பட்டது.

ஆனால் அவருக்கு தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட சிகிச்சையில் அவருக்கு புற்றுநோய் இருப்பது தெரியவந்தது. தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வினோத் கண்ணா, சிகிச்சை பலனின்றி இன்று மரணம் அடைந்தார்.

வினோத் கண்ணாவிற்கு கீதாஞ்சலி, கவிதா என்று இரு மனைவிகள் உள்ளனர். இதில் முதல் மனைவியான கீதாஞ்சலியை விவாகரத்து செய்துவிட்டார்.

இவர்களுக்கு ராகுல் கண்ணா, அக்ஷ்ய் கண்ணா, சாக்ஷி கண்ணா என்ற மூன்று மகன்களும், ஸ்ரத்தா கண்ணா என்ற மகளும் உள்ளனர்.

வினோத் கண்ணா ஓஷோவின் தீவிர பக்தர் என்பது குறிப்பிடத்தக்கது.

வினோத் கண்ணாவின் மறைவுக்கு நடிகர் ரஜினிகாந்த் உள்பட  பாலிவுட் பிரபலங்கள் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.