சிம்லா: இமாச்சலப் பிரதேச சட்டசபைத் தேர்தல் வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகிறது. முதல்வர் தாக்கூர் தனது குடும்பத்தினருடன் சென்று வாக்கினை செலுத்தினார்.

68 இடங்களை கொண்ட மாநில சட்டசபைக்கு இன்று தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. டிசம்பர் 8ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.  அதன்படி இன்று காலை 8மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக  வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இமாச்சல பிரதேச முதல்வர் ஜெய்ராம் தாக்கூர் தனது குடும்பத்தினருடன் சென்று செராஜ் சட்டசபை தொகுதியில் வாக்களித்தார்.

மாநிலத்தில் ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்ளும் நோக்கத்தில் பாஜகவும், ஆட்சியை கைப்பற்றும் நோக்கில் காங்கிரஸ் கட்சியும் தீவிரமாக தேர்தல் பணியாற்றின இந்த நிலையில், இன்று காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்கு பதிவு விறுவிறு என்று  நடந்து வருகிறது  மாலை 5:30 மணிக்கு வாக்குப்பதிவு முடிகிறது. மாநிலத்தில் வாக்களிப்பதற்கு வசதியாக 7,881 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த சட்டமன்ற தேர்தலில்  அரசியல் கட்சிகள், சுயேச்சைகள் என 412 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.  இந்த 412 பேரில் 24 பேர் மட்டுமே பெண்கள்.  பாஜகவும்,  காங்கிரசும் மொத்தம் உள்ள 68 தொகுதிகளிலும் வேட்பாளர்களை களம் இறக்கி இருக்கின்றன.  ஆம் ஆத்மி கட்சியும் அத்தனை இடங்களிலும் வேட்பாளர்களை  நிறுத்தி இருக்கிறது.   இடதுசாரி கட்சிகள் 12 இடங்களில் போட்டியிட்டு உள்ளனர்.   காங்கிரசுக்கும் பாஜகவுக்கும் இடையே தான் கடும் போட்டி நிலவுகிறது

மொத்த 55 லட்சத்து 92 ஆயிரத்து 828 வாக்காளர்கள் இந்த மாநிலத்தில் உள்ளனர்.  பெண் வாக்காளர்களை விட ஆண் வாக்காளர்கள் தான் அதிகம்.   இந்த மாநிலத்தில் மூன்றாம் பாலினத்தவர்கள் 38 பேர் உள்ளனர்.

வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 8ந்தேதி நடைபெறுகிறது. அன்று மாலை எந்த கட்சி ஆட்சி அமைக்கும் என்பது தெரிய வரும்.