டெல்லி: கர்நாடக உயர்நீதிமன்றத்தின் ஹிஜாப் தடை தீர்ப்புக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை அவசர வழக்காக விசாரிக்க மறுத்த உச்சநீதிமன்றம், விசாரணைக்கு ஏற்பதாக அறிவித்துள்ளதுடன், அடுத்தவாரம் விசாரிக்கப்படும் என தெரிவித்து உள்ளது.

கர்நாடக மாநிலத்தில் கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்டுள்ளது. இதை எதிர்த்து சில மாணவிகள் போர்க்கொடி தூக்கியதால், அங்கு வன்முறை ஏற்பட்டது. இதனால் கல்லூரிகள் மூடப்பட்டன. இதையடுத்து உடுப்பியை சேர்ந்த முஸ்லிம் மாணவிகள் சிலர், ஹிஜாப் தடையை நீக்கக் கோரி கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த விசாரித்த கர்நாடக உயர் நீதிமன்ற அமர்வு,  கடந்த மார்ச் 15-ம் தேதி, “ஹிஜாப் இஸ்லாமிய சட்டத்தில் அத்தியாவசியமான வழக்கம் அல்ல. எனவே கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிய விதிக்கப்பட்ட தடை செல்லும்” என தீர்ப்பு வழங்கியது.

இதை எதிர்த்து முஸ்லிம் மாணவிகள் 6 பேர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த மனு கடந்த ஏப்ரலில் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், அவசர வழக்காக விசாரிக்க கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால், அதை ஏற்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்து கிடப்பில் போட்டது.

இந்த நிலையில், ஹிஜாப் வழக்கை உடனே விசாரிக்க வேண்டும் என மூத்த வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷண்  உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி என்.வி.ரமணா, நீதிபதிகள் கிருஷ்ணா முராரி, ஹிமா கோலி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் வேண்டுகோள் விடுத்தார். அப்போது, முஸ்லிம் மாணவிகளின் கல்வி தொடர்பான இந்த மனுவை உடனே விசாரிக்க வேண்டும்” என நினைவூட்டினார்.

இதை ஏற்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா, “ஹிஜாப் தடை தொடர்பான மேல்முறையீட்டு மனு விசாரணைக்கு ஏற்கப்படுகிறது. அடுத்த வாரத்தில் பொருத்தமான அமர்வு அதனை விசாரிக்கும் என்று தெரிவித்தார். இதனால் இந்த வழக்கு அடுத்தவாரம் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.