டெல்லி: நெடுஞ்சாலை டெண்டர் முறைகேடு புகாருக்கு எதிராக  ஈபிஎஸ் தொடர்ந்த வழக்கில், திமுக சார்பில் கூடுதல் மனு தாக்கல் செய்யப் பட்டு உள்ளது.

தமிழகத்தில் நெடுஞ்சாலை பணிகளை மேற்கொள்ள ஒதுக்கீடு செய்யப்பட்ட டெண்டர் ஒப்பந்தத்தில் சுமார் 4,800 கோடி ரூபாய் முறைகேடு நடைபெற்றாகவும் இதுகுறித்து 2018ம் ஆண்டில் அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி மீது வழக்கு பதிவு செய்து விசாரனை நடத்தகோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ் பாரதி வழக்கு தொடர்ந்தார். இதே போல அறப்போர் இயக்கமும் புகார் கூறியிருந்தது.  ஒட்டன்சத்திரம் – தாராபுரம்- அவினாசிபாளையம் நான்கு வழிச்சாலைக்கான திட்ட மதிப்பீடு என்பது 713.34 கோடியாக உள்ள நிலையில் அந்த திட்டத்திற்கான நிதி 1,515 கோடியாக உயர்த்தப்பட்டு டெண்டர் வழங்கப்பட்டதாகவும்,  இந்த பணிக்கான ஒப்பந்தம் முதலமைச்சராக இருந்த  எடப்பாடி கே.பழனிசாமி உறவினர் ராமலிங்கம் என்பவருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் திருநெல்வேலி – செங்கோட்டை கொல்லம் நான்கு வழிச்சாலையை விரிவுபடுத்தி, பலப்படுத்தும் 720 கோடி ரூபாய்க்கான ஒப்பந்தம் “வெங்கடாஜலபதி அன்ட் கோ” என்ற நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.  மேலும் இந்த நிறுவனத்திற்கு நெடுஞ் சாலைத்துறை அமைச்சகத்தின் 200 கோடி ரூபாய் மதிப்புள்ள மதுரை ரிங் ரோடு ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதே போல பல்வேறு நிறுவனங்களுக்கு  எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சர் பதவியை தவறாகப் பயன்படுத்தி தவறாக வழங்கியுள்ளார் என ஆர்.எஸ் பாரதி மனுவில் தெரிவித்து இருந்தார். இந்த வழக்கில் எடப்பாடி பழனிசாமி மீதான புகாரை வெளிப்படை தன்மையுடன் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற காரணத்திற்காக இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்றம் கடந்த 2018 ஆம் ஆண்டு உத்தரவிட்டது.

சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.  கடந்த 2018ம் ஆண்டில் இவ்வழக்கில் விசாரனை நடத்திய உச்சநீதிமன்றம், பழனிசாமி மீதான புகாரை சிபிஐ விசாரிக்க இடைக்கால தடைவிதித்தது. இதன் பின்னர் இவ்வழக்கு நீண்ட காலமாக நிலுவையில் இருந்து வருகிறது .

இந்த நிலையில் இந்த வழக்கை விரைவாக விசாரித்து கொள்ளுமாறு தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை சார்பில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா அமர்வில் முறையிடப்பட்டது. அதன்படி வழக்கு கடந்த வாரம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.  அப்போது வழக்கில் எதிர்மனுதாரரான ஆர்.எஸ்.பாரதி தரப்பில், இந்த வழக்கை இரண்டு வாரத்துக்கு ஒத்தி வைக்க வேண்டும் என கோரப்பட்டது. ஆனால் தலைமை நீதிபதி இந்த வழக்கை அத்தனை நாட்கள் ஒத்திவைக்க முடியாது என கூறி வழக்கு மீதான விசாரணையை வரும் ஆகஸ்ட் 2ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

இதனையடுத்து இன்று வழக்கு விசாரணை தொடங்கப்படவுள்ளது. இன்று முதல் டெண்டர் முறைகேட்டு வழக்கில் இறுதி விசாரணை தொடங்கும் எனவும் நீதிபதி தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில்,  திமுகவின் ஆர்.எஸ்.பாரதி உச்சநீதிமன்றத்தில் கூடுதல் மனு தாக்கல் செய்துள்ளார். அதில், ஈபிஎஸ் நடவடிக்கையால் அரசுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டதாகவும்,  டெண்டர்களை நெருங்கிய உறவினர்களுக்கு ஈபிஎஸ் வழங்கியது உலகவங்கி வழிகாட்டுதல்களுக்கு எதிரானது எனவும் குறிப்பிட்டுள்ளார்.