சென்னை:

பிரபல சர்ச்சை சாமியார் ஜக்கி வாசுதேவுக்கு வழங்கப்பட்ட பத்மவிபூஷன் விருதை திரும்பப் பெற வேண்டும் என்று கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், மத்திய அரசுக்கு விளக்கம் கேட்டு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும், குடியரசு தினத்தன்று மத்திய அரசு பத்ம விருதுகளை வழங்கி வருகிறது. தகுதியின் அடிப்படையில் இன்றி தனி்ப்பட்ட செல்வாக்கு காரணமாகவே இந்த விருதை பலரும் பெறுகிறார்கள் என்ற விமர்சனம் நீண்டகாலமாக இருக்கிறது.

அது போலதத்தான் பிரபல சாமியார் ஜக்கி வாசுதேவுக்கு இந்த வருடம் பத்ம விருது கிடைத்தபோதும் சர்ச்சை எழுந்தது.

கோவை அருகில் வெள்ளியங்கிரி மலையில் ஈசா என்ற பெயரில் ஆசிரமம் நடத்தி வரும் இவர் மீது பல புகார்கள் உண்டு. உரிய அனுமதி மலையில் கட்டிடங்கள் கட்டி வருகிறார். யானை வழித்தடங்கள் மற்றும் நீராதாரங்களை அழிக்கிறார். உரிய அனுமதி பெறாமல் கல்வி நிலையங்களை நடத்துகிறார். பெண்கள் பலரை கட்டாயப்படுத்தி சந்நியாசம் பெற வைக்கிறார் என்றெல்லாம் புகார்கள் எழுந்துவருகின்றன.

இது குறித்து நமது பத்திரிக்கை டாட் காம் இதழில் பல கட்டுரைகளை வெளியிட்டுள்ளோம்.

இந்த நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜக்கி வாசுதேவ் கொடுக்கப்பட்ட பத்ம விபூஷன் பட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் சார்பாக வழக்கறிஞர் வெற்றிச்செல்வன் மனுத்தாக்கல் செய்தார். அந்த மனுவில், “ஜக்கி வாசுதேவ் மீது பல குற்றச்சாட்டுகள் உள்ளன.  அவர், சட்டத்தை மதித்து நடப்பவர் அல்ல என்பதற்கு பல உதாரணங்களைச் சொல்லலாம். குறிப்பாக, மலையில் அனுமதி இன்றி கட்டப்பட்டுள்ள ஈசா மைய கட்டிடங்களை இடிக்க அரசு நிர்வாகங்களில் ஒன்றான DTCP உத்தரவிட்டும் அதை ஜக்கி மதிக்கவில்லை” என்பதை சுட்டிக்காட்டியிருந்தார்.

இந்த மனுவினை விசாரித்த உயர் நீதிமன்றம், இது குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் நான்கு வாரங்களுக்குள் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது.