கோவை:

“தனது சட்டையை தானே கிழித்துக்கொண்டு காமெடி செய்கிறார் மு.க. ஸ்டாலின்” என்று தே.மு.தி..க. மகளிர் அணி தலைவி பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

கோவை வெள்ளியங்கரி மலையில் உள்ள ஈசா யோகா மையத்தில் நடைபெறும் நிகழ்ச்சிக்கு பிரதமர் மோடி இன்று வருகைதர உள்ளார். இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள தே.மு.தி.க. மகளிர் அணி தலைவர் பிரேமலதா விஜயகாந்தும் வந்திருக்கிறார்.

கோவை விமான நிலையத்தில் பிரேமலதா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், “தமிழக சட்டமன்றத்தில் நடைபெறும் நிகழ்வுகள் உலக அளவில் நம்மை தலை குனிய வைக்கிறது.

தே.மு..தி.க. தலைவர் கேப்டனும் சட்டமன்றத்தில் உறுப்பினராக இருந்தார். எதிர்க்கட்சி தலைவராக சிறப்பாக செயல்பட்டார்.  மக்களுக்காக கேள்வி கேட்டிருக்கிறார். மக்களுக்காக குரல் கொடுத்து அன்றைக்கு பெயர் வாங்கினார்.

ஆனால் இன்று இருப்பவர்கள் மக்கள் நல்லா இருக்கிற சட்டையை கிழிச்சிகிட்டு காமெடி பண்றாங்க.  இவர்களை மக்கள் நகைச்சுவையாக பார்க்கிறார்கள்” என்று தற்போதைய எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினை மறைமுகமாக கிண்டலடித்தார்.

மேலும் அவர், “புற வாசல் வழியா ஆட்சியை பிடிக்க முடியுமா என்று நினைக்கிறார், தற்போதைய எதிர்க்கட்சித் தலைவர்.  கேப்டன் அடிக்கடி சொல்வார்… நாம ஒன்னு நினைச்சா தெய்வம் நினைக்கும் என்று. மக்களுக்கு தெரியும் யார் நல்லவர்கள் என்று!” என பிரேமலதா தெரிவித்தார்.