சென்னை:
மிழக உள்ளாட்சித் தேர்தலை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ளாட்சித்தேர்தல் வரும் 17, 19 ஆகிய தேதிகளில் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்காக தமிழகஅரசு அரசாணைகளை வெளியிட்டது.
தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் நேற்றுதான் முடிவடைந்தது.
இதனிடையே திமுக அமைப்புச்செயலரும் ராஜ்யசபாஎம்.பி.யுமான ஆர்.எஸ்.பாரதி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு மனுத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் அவர் தெரிவித்திருந்ததாவது:
tn-ch
“கடந்தமாதம் 16-ந் தேதி உள்ளாட்சி தேர்தலில் ஊராட்சி ஒன்றியதலைவர், மாவட்ட பஞ்சாயத்து வார்டுகள் ,ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்கள் இதுதொடர்பாக ஊரகவளர்ச்சிதுறை தேர்தல்அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த அறிவிப்புக்கு பிறகு 19-ந் தேதி சென்னை மாநகராட்சிக்கான உள்ளாட்சிதேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இந்த அறிவிப்புகளில் பழங்குடியின மக்களுக்கு சுழற்சி முறையில் உரிய இடஒதுக்கீடு வழங்கப்படவில்லை. சென்னையில் 200 வார்டுகளில் ஒன்றுகூட பழங்குடியினருக்காக ஒதுக்கப்படவில்லை.
இது அரசியல்அமைப்பு சட்டத்திற்கும், பஞ்சாயத்துராஜ் சட்டத்திற்கும் எதிரானது. ஆகவே உள்ளாட்சிதேர்தல் குறித்து தமிழகஅரசு பிறப்பித்த அரசாணைகளை ரத்துசெய்துவிட்டு சுழற்சி முறையை பின்பற்றி முறையாக இடஒதுக்கீட்டு பின்பற்ற வேண்டும்” என்று அந்தமனுவில் ஆர்.எஸ். பாரதி குறிப்பிட்டிருந்தார்.
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் இம்மனுமீது விசாரணை நடத்தினார். திமுக மற்றும் அரசுதரப்பு வாதங்களைகேட்ட நீதிபதி கிருபாகரன் இதற்கு முன்னதாக 2006 மற்றும் 2011ம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் இடஒதுக்கீடு வழங்கியது தொடர்பான விவரங்களை ஒப்பிட்டுபார்த்தபின் வழக்கில் தீர்ப்பு வழங்குவதாக தெரிவித்திருந்தார்.
இன்று இவ்வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி கிருபாகரன், உள்ளாட்சித் தேர்தலையே ரத்து செய்து உத்தரவிட்டார். இதுதொடர்பாக மாநில தேர்தல்ஆணையம் பிறப்பித்த அரசாணைகள் அனைத்துக்கும் அவர் தடை விதித்தார். மேலும் உள்ளாட்சித்தேர்தல் அறிவிப்பானது அரசியல் நோக்கங்களுடன் வெளியிடப்பட்டுள்ளது எனவும் சாடினார்.
இதுகுறித்து கருத்து தெரிவித்த வழக்கறிஞர் வில்சன், “செப்டம்பர் 25ம் தேதி தேர்தல் அட்டவணையை மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது. மறுநாளே அதிகாலை 12.15 மணி நேரம் என குறிப்பிட்டு தேர்தல் அறிவிப்பை வெளியிட்டது.
எந்தெந்த வார்டுகள் யார்யாருக்கு ஒதுக்கீடு என்பதை முறையாக அறிவிக்கவில்லை. பஞ்சாயத்துசட்டம் 24-வது பிரிவை தேர்தல் ஆணையம் கடைப்பிடிக்கவில்லை .இட ஒதுக்கீட்டை முறையாக பின்பற்றாததும் தேர்தல் ஆணையத்தின் தவறாகும். இதனால்தான் உயர்நீதிமன்றம், தடைவிதித்துள்ளது” என்று வழக்கறிஞர் வில்சன் தெரிவித்தார்.