சென்னை:
மிழக உள்ளாட்சி தேர்தலை ஐகோர்ட்டு ரத்து செய்துள்ளது தொடர்பாக தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து உள்ளனர்.
தமிழக உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக வெளியிடப்பட்ட அரசாணையை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழக உள்ளாட்சித் தேர்தலில் பழங்குடியினருக்கு உரிய இடம் ஒதுக்கப்படவில்லை. உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான அரசாணையில் உள் நோக்கம் உள்ளது. எனவே உள்ளாட்சித் தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்று கூறி திமுக சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.
உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பில் முறைகேடு நடந்துள்ளதாக திமுக தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், தமிழக உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான 3 அரசாணைகளை ரத்து செய்வதாக உத்தரவு பிறப்பித்துள்ளது.
all-leader
இதுகுறித்து அரசியல் கட்சி தலைவர்களின் கருத்து….
தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் திருநாவுக்கரசர்:
உள்ளாட்சித் தேர்தலுக்கு போதிய கால அவசாகம் வழங்கப்படவில்லை என்றும்,  அனைத்து அரசியல் கட்சியினருக்கும், பொதுமக்களுக்கும் இது நல்ல வாய்ப்பாக அமையும். உள்ளாட்சித் தேர்தலை ஒத்திவைத்திருப்பது நல்லதுதான்.  எனினும், உள்ளாட்சித் தேர்தலை ரத்து செய்திருப்பதன் மூலம் மக்களின் வரிப்பணம் வீணடிக்கப்பட்டுள்ளது என்று கருத்துத் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ்:
உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக மாநில தேர்தல் ஆணையம் தொடக்கத்தில் இருந்தே சரியாக செயல்பட வில்லை. இடஒதுக்கீட்டு முறையை பின்பற்றுவதில் ஒரு ரகசிய போக்கையே தமிழக அரசு கடைபிடித்து வந்தது. எஸ்டி, எஸ்சி, பெண்களுக்கான இடங்கள் எது எது என்பது முறையாக வரையறுத்து வெளியிடப்பட வில்லை.
குறிப்பாக பெண்களுக்கு இந்த தேர்தலில் 50 சதவீத இடஒதுக்கீடு என்று சொல்லப்பட்டிருக்கிறது என்றாலும் பெண்களுக்கான இடங்கள் எது என்பது சரியாக தெரியப்படுத்தவில்லை.
மேலும், திருச்சி மாநகராட்சி பொது பிரிவுக்கு என்று முதலில் சொல்லப்பட்டது. பின்னர் பெண்களுக்கான இடம் என்று மாற்றிச் சொல்லப்பட்டது. இப்படி மாற்றி மாற்றி சொல்லி ஒரு குழப்ப நிலையில்தான் மாநில தேர்தல் ஆணையம் செயல்பட்டது.
எஸ்சி, எஸ்சி, பெண்கள் இடஒதுக்கீட்டை தமிழக அரசு வெற்றிக்காக பயன்படுத்த நினைத்ததே தவிர அவர்களுக்கு கொடுக்கப்பட வேண்டிய உரிமையாக கருதவில்லை. எனவே, சென்னை ஐகோர்ட் சொல்லி இருப்பது வரவேற்கத் தக்க ஒன்று என்று பீட்டர் அல்போன்ஸ் கூறியுள்ளார்.
தமிழக பாமக தலைவர் ராமதாஸ்:
உள்ளாட்சி தேர்தல் ரத்து வரவேற்கத்தக்கது என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கருத்து தெரிவித்துள்ளார்.
உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மாநில தேர்தல் ஆணையம் மேல்முறையீடு செய்யக்கூடாது என ராமதாஸ் கூறியுள்ளார். உள்ளாட்சி தொகுதிகளை மறுவரையறை செய்து முறையாக இடஒதுக்கீடு இறுதிசெய்ய வேண்டும்.
மேலும் உள்ளாட்சி தேர்தலை நியாயமாகவும் சுதந்திரமாகவும் தேர்தல் ஆணையம் நடத்த வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன்:
உள்ளாட்சித் தேர்தலுக்கு போதிய அவகாசம் தரப்படவில்லை என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் குற்றம் சாட்டியுள்ளார்.
மேல்முறையீடு செய்ய வேண்டும்:  மத்திய அமைச்சர்  பொன்.ராதாகிருஷ்ணன்
உள்ளாட்சி தேர்தல் தடையை எதிர்த்து ஆணையம் மேல்முறையீடு செய்ய வேண்டும் என மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இவ்வாறு கூறினார்.