ஹெல்மெட் அணியாத ஓட்டுநர்களின் உரிமத்தை ஏன் ரத்து செய்யக்கூடாது ? என உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

ஹெல்மெட் அணிவதை கட்டாயமாக்கவேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு ஒன்று இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், “ஹெல்மெட் அணிவதை கட்டாயமாக்க, அரசு தீவிரம் காட்டவில்லை. அரசு தரப்பில் மெத்தனமான போக்கே நிலவி வருகிறது” என்று வாதிடப்பட்டது.

இதற்கு பதிலளித்து வாதிட்ட அரசு வழக்கறிஞர், “ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டும் நபர்களுக்கு உரிய அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. காவல்துறையினருக்கு கூட பாரபட்சம் காட்டப்படாமல், பணியிடை நீக்கம் செய்யும் நிலை தொடர்கிறது. அரசு மெத்தனப்போக்குடன் இவ்விவகாரத்தை கையாளும் நிலையில் இல்லை. உரிய முறையில், ஹெல்மெட் அணிவதை ஓட்டுநர்கள் உணர்ந்திடும் விதத்தில் அரசு தேவையான விழிப்புணர்வு பிரச்சாரங்களையும் மேற்கொண்டு வருகிறது” என்று வாதிடப்பட்டது.

அப்போது குறுக்கிட்ட நீதிபதி, “ஹெல்மெட் அணியாத ஓட்டுநர்களின் உரிமத்தை ஏன் ரத்து செய்யக்கூடாது ? இதற்கு ஏதாவது சட்டம் இயற்ற முடியுமா ?” என்று கேள்வி எழுப்பியதோடு, வழக்கை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார்.

மேலும், ஹெல்மெட் அணியாதவர்களின் வாகனங்களை பறிமுதல் செய்யப்பட வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

[youtube-feed feed=1]