சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் வேலுமணி தொடர்புடைய டெண்டர் முறைகேடு வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட நிறுவனங்கள் மீதான வழக்கை ரத்து செய்ய உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்து உள்ளது.

கடந்த அதிமுக ஆட்சியின் போது உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்த எஸ்.பி.வேலுமணி மீது 811 கோடி ரூபாய் டெண்டர் முறைகேடு விவகாரம் தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார், எஸ்.பி. வேலுமணி உட்பட 17 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

இதனைத் தொடர்ந்து எஸ்.பி.வேலுமணிக்குச் சொந்தமான இடங்கள், அவருக்குத் தொடர்புடைய 60-க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடத்தினர். அப்போது சுமார் 13 லட்சம் ரூபாய் ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. அத்துடன் பல்வேறு சொத்து ஆவணங்களும் கைப்பற்றப்பட்டன. மேலும், எஸ்.பி.வேலுமணி செய்த டெண்டர் முறைகேடுகளில் அரசு அதிகாரிகள் அவருக்கு உடந்தையாக இருந்ததாகவும்,, 4 ஐஏஎஸ் அதிகாரிகள் உட்பட சென்னை மற்றும் கோவை மாநகராட்சி அதிகாரிகள் இதில் சம்பந்தப்பட்டிருப்பதாகவும் தகுந்த ஆதாரங்களுடன் லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணையில் தெரிய வந்தது.

அதுமட்டுமன்றி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு டெண்டர் முறைகேட்டில் பங்கிருப்பதற்குப் போதுமான ஆதாரங்கள் தங்கள் வசம் உள்ளதாகக் கூறியதுடன் அவர்களையும் வழக்கில் சேர்த்து விசாரணை நடத்த வேண்டும் என 2021 நவம்பர் மாதம் லஞ்ச ஒழிப்புத்துறை மூலம் தமிழக அரசுக்கு கடிதம் அனுப்பப்பட்டது.

இந்த வழக்கில், டெண்டர் எடுத்த நிறுவனமான ஆலயம், ஆலம், கண்ட்ரானிக்ஸ் இன்ப்ரா, வைடூரியா ஓட்டல்ஸ், ரத்னலட்சுமி ஓட்டல் மற்றும் காண்ட்ஸ்டோமால் குட்ஸ் ஆகிய நிறுவனங்கள்  தங்கள் மீதான வழக்கை ரத்து செய்ய கோரி மனுத்தாக்கல் செய்தன.

இந்த வழக்கு சென்னை உயர்நீதி மன்றத்தில் நிலுவையில் உள்ளது. இதற்கிடையில் இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என தொடர்புடைய நிறுவனங்கள் உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தன. இந்த நிலையில், வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த வெங்கடேஷ், முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுதமணி தொடர்பான டெண்டர் முறைகேடு வழக்கில், தொடர்புடைய நிறுவனங்கள் மீதான வழக்கை ரத்து செய்ய மறுத்துவிட்டது. மேலும் வழக்கு தொடர்பாக 6வாரங்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.