மதுரை
மாநிலம் எங்கும் அனுமதி பெறாமல் பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ள சிலைகளை அகற்ற மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவு இட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் பொது இடங்களில் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. இவற்றில் பல சிலைகள் உரிய அனுமதி இன்றி வைக்கப்பட்டவை ஆகும். இதனால் பல நேரங்களில் போக்குவரத்து நெரிசல் உள்ளிட்ட பல சிரமங்கள் ஏற்படுகின்றன. ஆயினும் இவற்றை அகற்றப் பல நேரங்களில் அரசியல் கட்சிகள் உள்ளிட்ட அமைப்புகள் எதிர்ப்பு தெரிவிக்கின்றன.
இதனால் அனுமதி பெறாமல் பொது இடங்களில் வைக்கப்பட்ட சிலைகளை அகற்றுவதில் அரசுக்குக் கடும் சிரமம் ஏற்படுவதால் இவற்றை அரசும் கண்டு கொள்வதில்லை. இதையொட்டி தஞ்சையை சேரத வைரசேகர் என்பவர் பொது நல வழக்கு ஒன்றைச் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தொடர்ந்தார்.
அந்த வழக்கு மனுவில் அனுமதி இன்றி மாநிலத்தில் பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ள சிலைகள் அகற்ற உத்தரவிடக் கோரிக்கை விடப்பட்டது. உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் இந்த வழக்கை நீதிபதிகள், சிவஞானம், ஆனந்தி ஆகியோரின் அமர்வு விசாரித்தது. அப்போது அமர்வு, “கடந்த 2016 ஆம் ஆண்டின் தேசிய நெடுஞ்சாலைத் துறை சட்டப்படி அனுமதி இன்றி பொது இடங்களில் வைக்கப்பட்ட சிலைகளை அகற்ற வழி உள்ளது
எனவே தமிழகத்தில் அனுமதி இன்றி அனைத்து பொது இடங்களிலும் வைக்கப்பட்டுள்ள அனைத்து சிலைகளையும் அகற்றலாம். இந்த சிலைகளை அகற்றத் தேசிய நெடுஞ்சாலைத் துறை, வருவாய்த்துறை, மற்றும் உள்ளூர் நிர்வாகத்தினர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என உத்தரவு இட்டுள்ளது.