சென்னை: திருச்செந்தூர் செந்திலாண்டவர் கோவிலில் தமிழில் குடமுழுக்கு செய்வது  குறித்து அரசு அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம்  மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

தமிழ் கடவுளான  ”திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தமிழில்தான்  குடமுழுக்கு உள்பட அனைத்தும்   செய்ய வேண்டும் என நாம் தமிழர் கட்சி வலியுறுத்தி வந்தது. மேலும், இதுகுறித்து அமைச்சர் சேகர்பாபு அவ்வப்போது கூறும் கருத்துக்களையும்,   தி.மு.க. அரசின் வெற்று அறிவிப்பினை ஒருபோதும் ஏற்க முடியாது” என்று கூறியிருந்தது.  இது தொடர்பான வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், திருச்செந்தூர் கோவிலில் தமிழில் குடமுழுக்கு செய்வது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது.

திருச்செந்தூர், அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில், 16 ஆண்டுகளுக்குப் பிறகு  வரும் ஜூலை 7-ம் தேதி குடமுழுக்கு நடைபெறவுள்ளது. இந்த குடமுழுக்கினை தமிழில் நடத்திடக் கோரி பல்வேறு அமைப்புகள் கோரிக்கை விடுத்தும், ஆர்ப்பட்டம், பொதுக்கூட்டம் நடத்தியும் அரசுக்கு வலியுறுத்தின.  நாம் தமிழர் கட்சியின் சார்பில் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது. இந்த நிலையில், திருச்செந்தூர் கோயில் குடமுழுக்கு தமிழிலும் நடத்தப்படும் என, திருக்கோயில் நிர்வாகம் அறிவித்திருந்தது. ஆனால், கோவில் நிர்வாகத்தின் அறிவிப்பை ஏற்க அரசியல் கட்சிகள் மறுத்துவந்தன.

இந்தநிலையில்,  தூத்துக்குடியை சேர்ந்த வியனரசு என்பவர்,  மதுரை  உயர்நீதிமன்றத்தில் தமிழில் குடமுழுக்கு தொடர்பாக மனு தாக்கல் செய்திருந்தார். அவரது மனுவில்,   வருகிற ஜூலை 7-ந்தேதி திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலின் குட முழுக்கு நடைபெற உள்ளது. தமிழ்க் கடவுளான முருகன் கோவிலின் குடமுழுக்கை தமிழ் மொழியில் நடத்தக்கோரி அதிகாரிகளிடம் மனு அளித்தும் இதுவரை எந்த பதிலும் வழங்கப்படவில்லை.

எனவே திருச்செந்தூர் முருகன் கோவிலின் குடமுழுக்கு விழாவை தமிழ் மொழியில் மந்திரங்களை ஓதி நடத்த உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், மரிய கிளாட் அமர்வு முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது. தமிழ்நாடு அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் வீரா கதிரவன் ஆஜராகி, கோவில் குட முழுக்கு நிகழ்வுகள் தமிழில் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என்றார். கோவில் தரப்பில், யாக சாலையில் மந்திரங்கள் ஓதுவது தொடங்கி, திருமுறை பாடுவது, திருப்புகழ் பாடுவது, 64 ஓதுவார்கள் பூஜை செய்வது ஆகிய நிகழ்வுகள் தமிழிலேயே நடைபெற உள்ளன என தெரிவிக்கப்பட்டது.

அதனை தமிழக அரசு அறிக்கையாக தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், இது தொடர்பாக நிலுவையில் உள்ள வழக்குகளோடு சேர்த்து, இந்த வழக்கை பட்டியலிட உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.