நடிகர் தனுஷ் தனது பெற்றோருடன் –     உரிமைகோரும் மதுரை தம்பதி

மதுரை,

டிகர் தனுஷ் தனது மகன் என்று மதுரையை சேர்ந்த தம்பதி மேலூர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளனர். அந்த விசாரணை பரபரப்பாக நடைபெற்று வரும் வேளையில், மதுரை ஐகோர்ட்டு கிளை, தனுஷ் பற்றிய வழக்கை மேலூர் கோர்ட்டு விசாரிக்க தடை விதித்து உள்ளது.

நடிகர் தனுஷை மதுரை அருகே உள்ள மேலூரை சேர்ந்த கதிரேசன்-மீனாட்சி தம்பதியர் தங்களது மகன் என்று சொந்தம் கொண்டாடி வருகின்றனர். மேலும்  தங்களுக்கு வயதாகிவிட்டதால், தற்போது நல்ல நிலையில் இருக்கும் தனுஷ் தங்களுக்கு  மாதாமாதம்  பராமரிப்பு தொகை வழங்க  உத்தரவிட வேண்டும்” என்றும் மேலூர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

இந்த வழக்கை ரத்து செய்யக்கோரியும், அவர்கள் கூறுவது உண்மை இல்லை என்றும்  நடிகர் தனுஷ் சார்பில் மதுரை ஐகோர்ட்டு களையில எதிர்மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதைத்தொடர்ந்து நடைபெற்ற விசாரணையின்போது, இரு தரப்பினரும் தனுஷின் பள்ளி சான்றிதழ்களை தாக்கல் செய்தனர். மேலும்,  நடிகர் தனுஷை நேரில் ஆஜராக கோர்ட்டு உத்தரவிட்டது. அப்போது அவரது அங்க அடையாளங்களை மருத்துவர்கள் உறுதி செய்து அறிக்கை தர நீதிபதி உத்தரவிட்டார்.

அதையடுத்து இந்த வழக்கு நீதிபதி ஜி.சொக்கலிங்கம் முன்பு நேற்று மாலை விசாரணைக்கு வந்தது. அப்போது தனுஷுக்கு மரபணு சோதனை நடத்த உத்தரவிட வேண்டும் என்று மதுரை தம்பதி சார்பாக அவரது வழக்கறிஞர் மனு தாக்கல் செய்தார். இதுபற்றிய விசாரணை நடைபெற்றது.

அதைத்தொடர்ந்து, மதுரை தம்பதியின் வழக்கறிஞரிடம் “நீங்கள் ஏன் ஆரம்பத்திலேயே மரபணு பரிசோதனை செய்யும்படி கேட்டு மனு தாக்கல் செய்யவில்லை. இவ்வளவு நாட்கள் கழித்து ஏன் கேட்கிறீர்கள்” என்று நீதிபதி கேள்வி எழுப்பினார்.

மேலும், இந்த வழக்கை நான் தொடர்ந்து இந்த வழக்கை விசாரிக்க முடியாது. இனி வேறு நீதிபதி தான் விசாரிப்பார். எனவே அவரிடம் விவாதத்தை நடத்திக்கொள்ளலாம் என்று தெரிவித்தார்.

அதையடுத்து, ‘இந்த வழக்கில் மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை கதிரேசன்-மீனாட்சி தம்பதியினரின் மனுவை மேலூர் கோர்ட்டு விசாரிக்க தடை விதிக்கப்படுகிறது’ என்று நீதிபதி உத்தரவிட்டார். அதைத்தொடர்ந்து விசாரணை 9ந்தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது.