நடன இயக்குநர் பிருந்தா முதன்முறையாக இயக்கி இருக்கும் படம், ‘ஹே சினாமிகா’.

துல்கர் சல்மான் – அதிதி ராவ் ஜோடியாக நடிக்க, காஜல் அகர்வால் முக்கிய வேடத்தில் தோன்றி இருக்கிறார்.

பாடலாசிரியர் மதன் கார்க்கி கதை, திரைக்கதை, வசனம் எழுதியுள்ளார். குளோபல் ஒன் ஸ்டுடியோஸ், ஜியோ ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் இணைந்து இந்தப் படத்தை தயாரித்துள்ளன.

கதை:

யாழனும், மௌனாவும் முதன்முறையாக சந்தித்துக்கொள்ளும்போது புயல் காற்று அடிக்கிறது, வான், காற்று என ரசித்துப் பேசுகிறார்கள். கவிதை நடையில் பேசிக்கொள்கிறார்கள். காதலும் கொள்கிறார்கள்.

அதன் பிறகு யாழனை மௌனாவுக்கு பிடிக்காமல் போய்விடுகிறது. ஏன், எதற்கு.. பிறகு பிரிந்தார்களா சேர்ந்தார்களா என்பதே கதை.

ஒளிப்பதிவு

படத்தின் ஆரம்ப காட்சிகளிலேயே அசத்தி விடுகிறார் ஒளிப்பதிவாளர். ஏதோ மாய, கற்பனை உலகத்துக்கு வந்துவிட்டோமோ என்று தோன்றுகிறது.

நடிப்பு

யாழனாக துல்கர் சல்மான். வழக்கம்போல ஒரு மாடர்னான, அதிகம் பேசும் துறுதுறு இளைஞர் வேடம்.

அவரது முந்தைய தமிழ்ப் படங்களான வாயை மூடிப் பேசவும், ஓகே கண்மணி ஆகிய படங்களை அவரது கதாபாத்திரம் நினைவுபடுத்துகிறது. ஆனாலும் ரசிக்கவைக்கிறார்.

மௌனாவாக அதிதி ராவ் ஹைதாரி. இயல்பாக நடித்திருக்கிறார். சிறு சிறு முகபாவங்களில்கூட ஈர்க்கிறார்.

மருத்துவர் மலர்விழியாக காஜல் அகர்வால் வருகிறார். கிட்டதட்ட வில்லி கதாபாத்திரம். மற்ற கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் இல்லை.

வசனங்கள்

மதன் கார்க்கியின் வசனங்கள் சிறப்பு.

நீ கேட்குறதுக்கெல்லாம் கோபப்படாம, பதில் மட்டும் சொல்றதுக்கு நான் கூகுள் இல்ல என்பது ஒரு டயலாக் உதாரணம்.

ஆனால், நாயகனின் நீள நீள பேச்சுக்களுக்கு எப்படித்தான் யோசித்து வசனம் எழுதினாரோ பாவம்!

பாடல்கள்

கோவிந்த் வசந்தாவின் பாடல்களும் பின்னணி இசையும் சிறப்பு.

இயக்கம்

பிருந்தா இயக்கும் முதல் படம். ஆனால் நடன இயக்குநராக பணி புரிந்த நீண்டகால அனுவத்தால் சிறப்பாகவே இயக்கி இருக்கிறார்.

முதல் பாதி முழுக்க துல்கர் சல்மானை பிரிய அதிதி எடுக்கும் முயற்சிகள், அதனை துல்கர் கண்டுகொள்ளாமல் இருப்பது என ஓரளவு சுவாரசியமாக நகர்கிறது

இரண்டாம் பாதியில் காஜல் கதாபாத்திர வடிவமைப்பும் அவரது நடிப்பும் கிட்டத்தட்ட சஸ்பென்ஸை ஏற்படுத்துகிறது.

அதே நேரம், யோகி பாபு வரும் காட்சி. படத்துக்கு சம்பந்தமில்லாமல் இருக்கிறது.

ஜட்ஜ்மெண்ட்

சின்ன விசயங்களுக்காக விவாகரத்து வரை போக வேண்டாம் என்கிற மெஸேஜ், தற்போது தேவைதான்.

இயக்குநர் பிருந்தாவை பாராட்டலாம்.

– யாழினி சோமு