ஈரோடு:
10-ம் வகுப்பு பொதுத்தேர்வு மேலும் தள்ளி போகும் என்பதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்து உள்ளார்.
10ம் வகுப்பு பொதுத்தேர்வு ஜூன் 1ந்தேதி நடைபெறும் என அறிவித்த அமைச்சர் செங்கோட்டை யன், திமுக மற்றும் கல்வியாளர்களின் எதிர்ப்பு காரணமாக, தேர்வை 15ந்தேதிக்கு தள்ளி வைப்பதாக அறிவித்தார்.
இந்த நிலையில், இன்று தனது சொந்த மாவட்டமான ஈரோட்டில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன்,
10-ம் வகுப்பு பொதுத்தேர்வு மாணவர்களின் எதிர் காலத்தை கருத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மாணவர்கள் அச்சமின்றி தேர்வு எழுத முழு பாதுகாப்பு வழங்கப்படும். பொதுத்தேர்வு மேலும் தள்ளி போகும் என்பதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை.
ஊரடங்கு மே 31-ந் தேதி வரை அமல்படுத்தப்பட்டதால் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு தள்ளி வைக்கப்பட்டது. இந்த மாதம் 25-ந் தேதி விமான போக்குவரத்து தொடங்கப்படுகிறது. 1-ந் தேதி முதல் ரெயில் போக்குவரத்து தொடங்குகிறது. இதனால் மக்கள் இயல்புநிலைக்கு திரும்பி விடுவார்கள். ஜூன் 15-ந் தேதிக்குள் இயல்பு நிலை முழுவதுமாக திரும்பி விடும்.
அதனால், அறிவித்தபடி, பொதுத்தேர்வு ஜூன் 15-ந் தேதி நடைபெறும். அதற்கான நடவடிக்கையில் நாங்கள் ஈடுபட்டு வருகிறோம். 10-ம் வகுப்பு தேர்வு மையம் 3 மடங்கு அதிகரிக்கப்பட்டு உள்ளது. முன்பு 3,084 தேர்வு மையம் இருந்தது. தற்போது 12,672 மையங்கள் செயல்படும், மாணவர்கள் அந்தந்த பள்ளியில் தேர்வு எழுத நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
மலை பகுதி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் பயிற்சி அளிக்கப்படுகிறது. அவர்கள் அச்சப்பட தேவையில்லை. இதற்கான விரிவான அறிக்கை இன்று மாலை வெளியிடப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இவ்வாறு அவர் கூறினார்.