ராஞ்சி

தமக்கு அழைப்பு வந்தால் தாம் ராமர் கோவில் திறப்பு விழாவுக்குச் செல்ல உள்ளதாக ஜார்க்கண்ட் முதல்வர் தெரிவித்துள்ளார்.

அடுத்த மாதம் 22 ஆம் தேதி அன்று உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.  இதையொட்டி நாடு முழுவதிலும் உள்ள அரசியல் கட்சித் தலைவர்கள், தொழில் அதிபர்கள், பிரபலங்கள் என ஏராளமானோருக்கு அழைப்பிதழ் அனுப்பப்பட்டுள்ளது.

இந்த விழாவில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்ட் கட்சி கலந்து கொள்ளாது என அக்கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி அறிவித்துள்ளார். மேலும் இதைப் போல் பல்வேறு எதிர்க்கட்சி தலைவர்கள் விழாவைப் புறக்கணிப்பார்கள் எனக் கூறப்படுகிறது.

ஜார்க்கண்ட் முதல்-மந்திரி ஹேமந்த் சோரன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது,

”எனக்கு அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழா தொடர்பாக இதுவரை அழைப்பு வரவில்லை. அழைப்பு வந்தால் விழாவில் பங்கேற்பேன் நான் மத நம்பிக்கை கொண்டவன், கோவில்கள் மற்றும் குருத்வாராக்கள் போன்ற மத வழிபாட்டுத் தலங்களுக்குச் செல்வது எனக்கு வழக்கம். 

தற்போது ஜேஎம்எம்-காங்கிரஸ்-ஆர்ஜேடி கூட்டணி அரசாங்கம் 4 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. ஆட்சிக்கு வந்ததில் இருந்து எதிர்க்கட்சிகள் அதைச் சீர்குலைக்க முயற்சி செய்தன. எப்போதுமே நாங்கள் பழங்குடியின மக்கள் தான், முட்டாள்கள் அல்ல. எங்களுக்கு  எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பை சமாளிப்பது எப்படி? என்பது எங்களுக்குத் தெரியும்” 

என்று ஹேமந்த் சோரன் கூறினார்.