சென்னை: தமிழ்நாட்டில், இன்று முதல் இருசக்கர வாகனங்களில் பின்னால் அமர்ந்து செல்பவர்களுக்கும் ஹெல்மெட் கட்டாயம் என சென்னை போக்குவரத்து காவல்துறை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.
வாகன விபத்தின்போது, ஹெல்மெட் அணியாதவர்களால் உயிரிழப்பு அதிகரித்து வருகிறது. கடந்த நான்கறை மாதங்களில் மட்டும் (ஜனவரி 1 முதல் மே 15-ம் தேதி வரை) இருசக்கர வாகனத்தில் சென்று ஹெல்மெட் அணியாமல் சென்றவர்கள் 98 பேர் உயிரிழந்திருப்பதும், 841 பேர் காயம் அடைந்துள்ளதாக காவல்துறை தெரிவித்து உள்ளது. மேலும், ஹெல்மெட் அணியாமல் பயணித்ததில் 80 மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் மற்றும் 18 பின்னிருக்கை பயணிகள் என்பதுடன், 714 மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் மற்றும் 127 பின்னிருக்கை பயணிகள் காயமடைந்துள்ளனர் என்று தெரிவித்துள்ளது.
இதையடுத்து இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் அனைவரும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று போலீசார் அறிவுறுத்தி உள்ளனர். மாநில தலைநகர் சென்னையில் இன்று (மே 23 ஆம் தேதி) முதல் இருசக்கர வாகனங்களில் பின்னால் அமர்ந்து செல்பவர்களுக்கும் ஹெல்மெட் கட்டாயம் என்று சென்னை போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.
அத்துடன் ஹெல்மெட் அணியாமல் செல்லும் வாகன ஓட்டிகளை பிடிக்க 12 இடங்களில் அதிரடி சோதனை நடத்த காவல்துறை திட்டமிட்டுள்ளது. இருசக்கர வாகன விபத்துகளைக் கட்டுப்படுத்த,குறைக்க இன்று முதல் இரு சக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பின்னிருக்கை நபரும் ஹெல்மெட் அணிவது கட்டாயம் என்றும் வாகன ஓட்டிகள் விதிகளை கடைபிடிப்பதை உறுதி செய்ய அதிரடி சோதனை நடத்த காவல்துறை திட்டமிட்டுள்ளது எனவும் குறிப்பிடப்படுகிறது.