டெல்லி: நாடு முழுவதும், மாநிலங்களில் உள்ள ஒவ்வொரு மாவட்டங்களிலும் ஹெலிகாப்டர் இறங்குதளம் அமைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளதாக  மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்து உள்ளார்.

கேதார்நாத்தில் சமீபத்தில் நடந்த ஹெலிகாப்டர் விபத்து நாடு முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதில் சென்னையைச் சேர்ந்த 3 பேர் உள்பட 7 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

‘இந்த நிலையில், செய்தியாளர்களை சந்தித்த மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா, கேதார்நாத்தில் நடந்த ஹெலிகாப்டர் விபத்து துரதிர்ஷ்டவசமானது. இதுபோன்ற சம்பவங்களின்போது உடனடியாக மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான பணிகள் நடந்து வருகிறது. இதை மேலும் துரிதப்படுத்தும் வகையில், நாடு முழுவதும் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஹெலிகாப்டர் இறங்குதளம் அமைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. இது தொடர்பாக 780 மாவட்ட கலெக்டர்களுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது என்றார்.

மாவட்டங்களில் ஹெலிகாப்டர் இறங்குதளம் அமைப்பதற்கான  நிலையான வழிகாட்டுதல்களும் தயாரிக்கப்பட்டு வருவதுடன், நெடுஞ்சாலைகளில் ஒவ்வொரு 200 அல்லது 300 கி.மீ. தொலைவிலும் ஹெலிகாப்டர் இறங்குதளம் அமைக்கும் திட்டம் இருக்கிறது. இது தொடர்பாக மத்திய போக்குவரத்து அமைச்சகத்துடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது என்றார்.

இந்த திட்டத்தில் ஹெலிகாப்டர் சேவை, சஞ்சீவனி திட்டத்தின் கீழ், ரிஷிகேஷ் எய்ம்ஸ் உதவியுடன்  தொடங்க திட்டமிடப்பட்டு வருவதாகவும்,.  இதன் மூலம் விபத்து அல்லது பிற வகையான அவசரநிலை ஏற்பட்டால் 125 கி.மீ. தூரம் வரை உடனடி நிவாரணம் கிடைக்கும் என்றார்.