சென்னை:
பொங்கல் விடுமுறை முடிந்து ஊர் திரும்பு மக்களால் சுங்க சாவடிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

சென்னையில் இருந்து 7 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பொங்கல் பண்டிகையைக் கொண்டாட சொந்த ஊர்களுக்கு பயணமாகி இருந்ததனர். பண்டிகைக் கொண்டாட்டங்கள் முடிந்த நிலையில், தென் மாவட்டங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கானோர் சென்னைக்கு திரும்பிய வருகின்றனர்.

இதையடுத்து, சென்னை- மதுரை நெடுஞ்சாலையில் நேற்று பகல் முழுவதும் போக்குவரத்து நெரிசலாக இருந்தது. இரவிலும் ஏராளமான வாகனங்கள் வந்து கொண்டிருந்ததால் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர். நீண்ட நேரத்திற்குப் பின்னரே கொடைரோடு, விக்கிரவாண்டி சுங்கச் சாவடிகளைக் கடக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

இதேபோன்று, தென் மாவட்டங்களில் இருந்து சென்னை வந்த எக்ஸ்பிரஸ் ரெயில்கள் பயணிகள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தன. ரெயில்கள் அனைத்திலும் அனைத்து வகுப்புகளிலும் காத்திருப்போர் பட்டியலில் சுமார் 50-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். இதனால், சமூக இடைவெளியை பின்பற்ற முடியாமல் ரெயில் பெட்டிகள் பயணிகளால் நிரம்பி வழிந்தன.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நெக்குந்தி சுங்க சாவடி உள்ளது. இங்கு பெங்களூர் மற்றும் சென்னையில் இருந்து பொங்கல் விடுமுறைக்கு சொந்த ஊர்களுக்கு வந்து பண்டிகையை கொண்டாடிவிட்டு நாளை அனைவரும் பணிக்கு செல்வதற்காக சென்றதால் சுங்கச்சாவடிகளில் சுமார் 1 கிலோமீட்டர் தூரத்திற்கும் மேலாக வாகனங்கள் 1 மணி நேரம் அணிவகுத்து நின்றன கூடுதல் பணியாளர்களை அமர்த்தி சுங்க சாவடியில் வாகனங்களை வேகமாக அனுப்பும் பணியில் சுங்கச்சாவடி ஊழியர்கள் ஈடுபட்டனர் அதன் பின்னர் வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக சென்றது.