சென்னை: தமிழகத்திலேயே அதிகபட்சமாக சென்னை மாநகரில் இன்று 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் சுட்டெரித்தது.
தமிழகத்தில் கோடை காலம் மார்ச் மாதமே தொடங்கியது. கடந்த 4ம் தேதி முதல் கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திரம் ஆரம்பித்தது. பொதுவாக கோடை வெயில் தொடங்கினாலே வெப்பநிலை 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டும்.
ஆனால் இந்த ஆண்டு கத்திரி வெயில் ஆரம்பித்ததில் இருந்து அதிகபட்ச வெப்பநிலை 35 லிருந்து 38 ஆக பதிவாகி வந்தது. இந் நிலையில் கடந்த 2 நாட்களாக வெயிலின் தாக்கம் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டியதால் மக்கள் பெரும் அவதி அடைந்தனர்.
தமிழகத்திலேயே அதிகபட்சமாக சென்னை மாநகரில் இன்று 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் சுட்டெரித்தது. திருத்தணியில் 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தியதால் மக்கள் அவதிக்குள்ளாகினர்.
வேலூரில் 107.2 டிகிரி பாரன்ஹீட் வெயில் தாக்கியதால் மக்கள் மிகவும் சிரமப்பட்டனர்.  கடலூரில் 107,  ஈரோடு மற்றும் பரங்கிப்பேட்டையில் 105, நாகையில் 104, சேலத்தில் இன்று 102 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானது.