சென்னை
தீபாவளிக்கு இன்னும் 2 நாட்களே இருப்பதால் சென்னை எங்கும் மக்கள் வெள்ளம் காணப்படுகிறது.
வரும் 18ஆம் தேதி வரவுள்ள தீபாவளிப் பண்டிகைக்காக துணிமணிகள் உட்பட பொருட்களை மக்கள் பெருமளவில் வாங்கி வருகின்றனர். துணிக்கடைகள், நகைக்கடைகள், ஓட்டல்கள் உட்பட எங்கும் மக்கள் திரள் திரளாக வருகின்றனர். ஒரு சில நேரங்களில் துணிமணியை தேர்ந்தெடுக்க சில மணி நேரங்கள் ஆகிவிடுகின்றன.
சென்னையின் எல்லாப் பகுதிகளும் நெரிசலுடன் இருந்தாலும், முக்கியப் பகுதியான தி நகர் என சுருக்கமாக அழைக்கப்படும் தியாகராய நகரில் மக்கள் நடக்கவும் முடியாத அளவுக்கு கூட்டம் உள்ளது. சென்னை மக்களில் பலருக்கு தி நகரில் பொருட்கள் வாங்குவதில் மிகவும் ஆர்வம் உள்ளது.
தி நகரில் உள்ள துணிக்கடைகள், வணிக வளாகங்கள், உணவு விடுதிகள் ஆகியவை மக்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. பெரும்பாலானோர் இரு சக்கர வாகனங்கள், கார் என வருவதால் நிறுத்தும் இடங்களிலும் இடம் இல்லை. மற்றும் பலர் ஆட்டோவில் வருவதால் போக்குவரத்து நெரிசல் மிகுந்துள்ளது. இந்த நெரிசலை தவிர்க்க நினைத்து பலரும் மின்சார ரெயிலை தேர்வு செய்வதால் மின்சார ரெயில்களிலும் கட்டுக்கடங்காத கூட்டம் உள்ளது.
இந்த நெரிசலை பயன்படுத்தி திருடர்களும் தங்கள் கைவரிசையை காட்டக்கூடும் என்பதால் போலீசார் தீவிர கண்காணிப்பில் உள்ளனர். நகரின் பல இடங்களில் கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. சாதாரண உடையில் உள்ள போலீசாரும் கூட்டத்தை கண்காணித்து வருகின்றனர். திருடர்களின் நடவடிக்கைகள், மற்றும் அவர்கள் திருட கையாளும் தந்திரங்கள் குறித்து ஒலிபெருக்கியில் போலீசார் அறிவித்து வருகின்றனர்.
இந்த நெரிசல் வணிகப் பகுதிகளில் மட்டுமின்றி கோயம்பேடு பகுதியிலும் அதிகம் உள்ளது. தீபாவளி முன்னிட்டு வெளியூர் வாசிகள் தங்கள் ஊருக்கு செல்வதும், சென்னைக்கு வருபவர்களுமாக வாகனங்கள் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் குவிந்துள்ளது. நேற்று மட்டும் ஒரு கிலோமீட்டர் தூரத்தை கடக்க ஒரு மணி நேரம் ஆகி உள்ளது.
நேற்றும் இன்றும் விடுமுறை நாட்கள் என்பதால் நகரெங்கும் மக்கள் கூட்டம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கூட்டத்தை கட்டுப்படுத்தவும், பாதுகாப்பு ஏற்பாடுகளுக்காகவும் போலீஸ் படை அதிகரிக்கப்பட்டுள்ளது.