மும்பை:
மும்பையில் கனமழை காரணமாக உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் இரங்கல் தெரிவித்துள்ளார்.

மும்பை மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் நேற்று இரவு முதல் கொட்டித் தீர்த்த கனமழையால், நகரங்களில் பல்வேறு பகுதிகளை மழை நீர் சூழ்ந்துள்ளது.

மழைநீருக்குள் மும்பை நகரம் மிதப்பதால் புறநகர் ரயில்சேவை, பேருந்து போக்குவரத்து சேவை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது மக்களின் இயல்பு வாழ்க்கையும் முடங்கியுள்ளது. செம்பூர் பகுதியில் ஒரு குடியிருப்பு பகுதியில் மழைக்கு தாங்காமல் சுவர் இடிந்துவிழுந்ததில் 15 பேர் பலியானார்கள். 16 பேர் இடிபாடுகளில் இருந்து காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர்.

தென் மேற்கு பருவமழையின் 2-வது சுற்று தீவிரமடைந்துள்ளதால், மும்பைக்கு 48 மணிநேரத்துக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கையை இந்திய வானிலை மையம் விடுத்திருந்தது.

கடந்த 6 மணிநேரத்தில் மட்டும் மும்பையில் 100மிமீட்டர் மழை பெய்துள்ளது. மும்பைக்கு முதலில் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்ககப்பட்ட நிலையில் அது ரெட் அலர்ட்டாக மாற்றப்பட்டுள்ளது. இன்று காலை 6.30 மணி நிலவரப்படி மும்பை மற்றும் புறநகரில் மட்டும் 120மி.மீ மழை பதிவாகியுள்ளது.

மும்பையில் சில இடங்களிலும், புறநகர் பகுதிகளிலும் கனமுதல் மிகக் கனமழை பெய்யதுள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்திய வானிலை மையம் வெளியிட்ட அறிவிப்பின்படி, மும்பையின் சான்டாகுரூஸ் பகுதியில் 213 மிமீ, பாந்த்ரா பகுதியில் 197 மி.மீ, கொலாபா பகுதியில் 174 மி.மீ மழை பதிவாகியுள்ளது.

இரவு முதல் கொட்டித் தீர்த்த மழையால், மும்பையின் புறநகரில் பல்வேறு இடங்களில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. இதனால் புறநகர் ரயில்வே சேவை நிறுத்தப்படுவதாக மேற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

தாதர், பரேல், மாட்டுங்கா, குர்லா, சியான், பாந்தப் உள்ளிட்ட பல புறநகர் பகுதிகளுக்கு மும்பை சிஎஸ்எம்டி ரயில்நிலையத்திலிருந்து தானே நகர் வரை புறநகர் ரயில்கள்இயக்கப்படாது என்று அறிவி்க்கப்பட்டுள்ளது. மேலும், மத்திய ரயில்வே மற்றும் மேற்கு ரயில்வேக்கு உட்பட்ட நீண்ட தொலைவு செல்லக்கூடிய ரயில்களும் மழை காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளன. பல ரயில்கள் நடுவழியில் நிறுத்தப்பட்டுள்ளன. மும்பையில் செம்பூர் பகுதியில் உள்ள பாரத்நகர் பகுதியில் சுவர் இடிந்து விழுந்ததில் 11 பேர் உயிரிழந்தனர்.

பாரத்நகர் பகுதியில் ஒரு குடியிருப்பு மீது மரம் சாய்ந்து சுவர் மீது விழுந்தது. இதில் சுவர் இடித்து விழுந்ததில் இடிபாடுகளில் சிக்கி 11 பேர் உயிரிழந்துள்ளனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. தீயணைப்புத் துறை, தேசியபேரிடர் மீட்புத்துறையினர் விரைந்து வந்து மீட்புப்பணியில் ஈடுபட்டனர். இதில் இடிபாடுகளில் இருந்து காயங்களுடன் 16 பேரை மீட்டு அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்துள்ளனர். புறநகரான விக்ரோலி பகுதியில் இன்று அதிகாலை 2.30 மணி அளவில் குடியிருப்பு பகுதியின் சுவர் இடிந்து விழுந்ததில் 4 பேர் உயிரிழந்தனர், இருவர் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இதற்கிடையே மும்பையில் சியான், செம்பூர், காந்தி மார்க்கெட், அந்தேரி மார்க்கெட், ஆர்சிஎப் காலனி, எல்பிஎஸ் சாலை, வாட்லா பாலம் ஆகியவற்றில் மழை நீர் சூழ்ந்ததால், மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. பேருந்து போக்குவரத்துமுற்றிலும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் மும்பையில் கனமழை காரணமாக உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டரில், “மும்பையின் செம்பூர் மற்றும் விக்ரோலி பகுதிகளில் பலத்த மழையைத் தொடர்ந்து நிகழ்ந்த சம்பவங்களில் பல உயிரிழப்புகள் ஏற்பட்ட செய்திகளால் ஆழ்ந்த வருத்தமடைந்தேன். இந்த சம்பவத்தில் துயரமடைந்த குடும்பங்களுக்கு எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன், அங்கு அனைவருக்கும் நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகள் கிடைக்க விரும்புகிறேன்” என்று ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பதிவிட்டுள்ளார்.