மும்பை:

மகராஷ்டிரா மாநிலம் மும்பையில் இன்று காலை முதல் நீண்ட நேரம் கனமழை பெய்தது. இதனால், அங்கு போக்குவரத்து ஸ்தம்பித்துள்ளது.

தெற்கு ராஜஸ்தான் பகுதியில் வீசி வரும் பலத்த காற்று காரணமாக மேற்கு கடற்கரை பகுதியில் காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகியுள்ளது. இதேபோல ஒடிசாவின் வடக்கு மற்றும் அதை ஒட்டிய பகுதியிலும் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது. இதன் காரணமாக மும்பையில் மழை பெய்து வருகிறது.

கடந்த 2005ம் ஆண்டு ஜூலை 26ம் தேதிக்கு பிறகு இன்று தான் நீண்ட நேரம் கனமழை பெய்து வருவதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. கடந்த 48 மணி நேரத்தில் நகரின் பல பகுதிகளில் சராசரிக்கும் அதிகமாக மழை பதிவாகியுள்ளது. நகர் மற்றும் புறநகர் பகுதியில் அடுத்த 24 மணி நேரத்தில் கனமழை, மிகவும் கனமழை பெய்யவும் வாய்ப்பு உள்ளது என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இன்று மாலை அதிக உயரத்திற்கு கடல் அலைகள் எழும்பும் என கூறப்படுகிறது. கனமழை காரணமாக தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. பெரும்பாலான சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. ரெயில் தண்டவாளங்களில் வெள்ளம் தேங்கியிருப்பதால் அனைத்த ரெயில்களும் தாமதமாக இயக்கப்படுகிறது.

சில ரெயில்களை இயக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. பல இடங்களில் போக்குவரத்து தடைபட்டுள்ளது. வெள்ளத்தில் மூழ்கியுள்ள சாலைகளில் ஆங்காங்கே பள்ளங்கள் இருப்பதால் வாகன ஓட்டிகளும்,பாதசாரிகளும் தடுமாறி விழுகின்றனர். இதனால் மிகுந்த அச்சத்துடன் மக்கள் நடந்து செல்கின்றனர். வாகனங்கள், வெள்ளத்தில் மிதந்தபடி செல்கின்றன.

வெள்ள நீர் பாரெலில் கேஇஎம் மருத்துவமனையில் தரை தளத்திற்குள் புகுந்தது. இதனால் மருத்துவமனையில் 30 நோயாளிகள் உடனடியாக மேல் மாடிக்கு மாற்றப்பட்டனர். பல பகுதிகளில் மின்சாரம் தடைபட்டுள்ளது. அந்தேரி கிழக்கு சாகர் பகுதியில் தண்ணீர் அதிகளவு தேங்கியுள்ளது. நகரில் காலை 7:30 மணியிலிருந்து 6 மணி நேரங்களில் 100 மில்லி மிட்டர் மழை பதிவாகி உள்ளது

மும்பையில் 3 தேசிய பேரிடர் மீட்பு குழுவானது தயார் நிலையில் உள்ளது. புனேயில் இருந்து மேலும் 2குழுக்கள் மும்பை விரைந்துள்ளது.