தஞ்சாவூர்: டெல்டா மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வரும் கடந்த இரு நாட்களாக வெளுத்துவாங்கிய கனமழை காரணமாக பல ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள குருவை சாகுபடி தண்ணீரில் மூழ்கி பெரும் சேதத்தை எற்படுத்தி உள்ளது. மழையின் போது மின்னல் பாய்ந்து தந்தை மகன் பலியாகி உள்ளனர்.

நடப்பாண்டு பரவலாக மாநிலம் முழுவதும் சீசனை தாண்டியும் மழை பெய்து வருகிறது. ஏற்கனவே கர்நாடகா, கேரள மாநிலங்களில் பெய்த கனமழை காரணமாக, தமிழ்நாட்டில் உள்ள நீர் நிலைகள், மேட்டூர் அணை நிரம்பி, பாசனமும் செழித்து வருகிறது. மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் காரணமாக, டெல்டா மாவட்டங்களில் சம்பா சாகுபடி அமோகமாக நடைபெற்று வந்தது. ஆனால், கடந்த சில நாட்களாக பெய்துவரும் கனமழை காரணமாக, அறுவடைக்கு தயாராக உள்ள நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி விவசாயிகளுக்கு பெரும் சேதங்களை ஏற்படுத்தி உள்ளது.

தஞ்சாவூர் மாவட்டத்தில் மட்டும் 72 ஆயிரத்து 816 ஹெக்டேரில் குறுவை சாகுபடி செய்யப்பட்டது. அதுபோல டெல்டா மாவட்டங்களில் மட்டும் பல ஆயிரக்கணக்கான ஏக்கர் வயல்களில் நெற் பயிர்கள் அறுவடைக்கு தயாராக இருந்தது. பல இடங்களில் அறுவடை பணிகளும் நடைபெற்று வந்தது. மேலும் பல இடங்களில்,  நெல்மணிகள் முற்றி இன்னும் ஒரு வாரத்தில், அறுவடை செய்யப்பட உள்ள நிலையில், பெய்த திடீர் கனமழை காரணமாக, பயிர்கள் தண்ணீரில் மூழ்கி சேதம் அடைந்துள்ளது. இது  விவசாயிகளிடையே கண்ணீரை வரவழைத்துள்ளது.

டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவையாறு, புதுகல்விராயன்பேட்டை, மானோஜிபட்டி, சித்திரைக்குடி, பூதலூர், கல்விராயன்பேட்டை, ஒரத்தநாடு சூரக்கோட்டை, ஆலக்குடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியது.  மாவட்டம் முழுவதும் கனமழையால் அறுவடைக்கு தயாரான 4,000 ஏக்கர் குறுவை நெற்பயிர்கள் மூழ்கி சாய்ந்தது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களில் அறுவடைக்கு தயாராக இருந்த 7 ஆயிரம் ஏக்கர் குறுவை நெற்பயிர்கள் நீரில் மூழ்கியது.

நாகப்பட்டினம் மாவட்டத்திலும் பல்வேறு பகுதிகளில் குறுவை அறுவடை பணி தீவிரமாக நடந்து வந்த நிலையில் நேற்றுமுன்தினம் இரவு பெய்த பலத்த மழையால், அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த நெற்கதிர்கள் வயலில் சாய்ந்தது.  மாவட்டம் முழுவதும் 500 ஏக்கர் குறுவை நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியது.

இதற்கிடையில், மன்னார்குடி முக்குளம் சாத்தனூர் தளிக்கோட்டையை சேர்ந்த அன்பரசன் (55), மகன் அருள்முருகன் (25) ஆகியோர் மழை காரணமாக, பயிர்கள் தண்ணீரில் மூழ்குவதை தடுக்க, வயலில் தேங்கியிருந்த மழை நீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது, ஏற்பட்ட மின்னல் தாக்கி, தந்தை, மகன் இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். வயலுக்கு போனவர்கள் வீடு திரும்பாததால், அவர்களது குடும்பத்தினர் தேடிச்சென்றபோது, அவர்கள் இறந்து கிடந்தது தெரியவந்தது.  உயிரிழந்த அருள்முருகனுக்கும், கார்த்திகா என்ற பெண்ணுக்கும் திருமணமாகி இருபது நாட்களே ஆன நிலையில், தந்தையோடு வயலுக்கு சென்ற போது மின்னல் தாக்கி பலியானது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

இந்த ஆண்டு குறுவை சாகுபடிக்கு பயிர் காப்பீடு இல்லாததால் இழப்பை ஈடு செய்வது கடினம் என கூறும் விவசாயிகள், பாதிப்படைந்த பயிர்களை கணக்கீட்டு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கண்ணீரோடு தமிழகஅரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.