சென்னை:
சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் நேற்றிரவு பரவலாக பல்வேறு இடங்களில் கனமழை பெய்தது.
வெப்பச்சலனம் காரணமாக சென்னையில் நேற்றிரவு இரவு 10 மணி அளவில் வடபழனி, ஆலந்தூர், போரூர், அம்பத்தூர், உள்ளிட்ட பல பகுதிகளில் கன மழை பெய்தது. இதேபோல் திருநின்றவூர், பூவிருந்தவல்லி, ஆவடி, பட்டாபிராம், செம்பரம்பாக்கம் பகுதிகளிலும் மழை ஜில்லெனெ கொட்டியது. சூளைமேடு, கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம் பகுதிகளில் பரவலாக மழை பெய்தது . சென்னையின் ராயப்பேட்டை, கொளத்தூர், ஆதம்பாக்கம், கோட்டூர்புரம், மயிலாப்பூர், துரைப்பாக்கம், சோழிங்கநல்லூர், ராமாபுரம், வளசரவாக்கம், சைதாப்பேட்டை, நந்தனம், அனகாபுத்தூர் உள்ளிட்ட பகுதிகளிலும் நல்ல மழை பெய்தது. சைதாப்பேட்டை, சின்னமலை,கிண்டி, அண்ணா பல்கலைக்கழகம், அம்பத்தூர், வேளச்சேரி, கோயம் பேடு பகுதிளிலும் காற்றுடன் நல்ல மழை பெய்தது. லாக்டவுனால் வீடுகளுக்குள் முடங்கி கிடக்கும் சென்னை மக்கள் மழையை ரசித்தபடி குளிரை அனுபவித்து மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழகத்தில் 2 நாட்களுக்கு மழை பெய்யும் – வானிலை மையம் தகவல்
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 48 மணி நேரத்தில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 48 மணி நேரத்தில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யும் என தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவக்காற்று மற்றும் வெப்பச்சலனம் காரணமாக பிற பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலையையொட்டியுள்ள நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.