திருச்சி: தமிழ்வழிக் கல்வி பயிலும் பிற மாநில மாணவர்களுக்கும் பொதுத் தேர்வை முழுமையாக ரத்து செய்து அனைவரும் தேர்ச்சி பெற்றவர்களாகவும் அறிவிக்க வேண்டும் என்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் தேசியத் தலைவர் காதர் மொகிதீன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது குறித்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் தேசியத் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர்மொகிதீன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி உள்ளதாவது:

கடந்த 9ம் தேதியன்று தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக, 10ஆம் வகுப்புப் பொதுத்தேர்வை முழுவதுமாக ரத்து செய்வதோடு, அத்தேர்வர்கள் அனைவரையும் தேர்ச்சி பெற்றவர்களாகவும் அறிவித்து அரசாணை வெளியிட்டிருந்தார்.

கரோனா நோய்த்தொற்று தீவிரம்பெற்றுள்ள சூழலில், தேர்வுகள் ரத்து செய்யப்பட்டதை மனதார வரவேற்கிறேன். அதேசமயம் தமிழ்நாடு அரசின் இந்த அரசாணை, தமிழ்நாட்டினைத் தவிர்த்துப் பிற மாநிலங்களில் தமிழ்வழிக் கல்வியில் பயிலும் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் பொருந்துமா என்கிற கேள்வியும் குழப்பமும் நிலவுகிறது.

குறிப்பாக மும்பை மாநகரில் தமிழ்வழிப் பள்ளிக்கூடங்களில் 10ஆம் வகுப்புத் தேர்வு எழுதவுள்ள மாணவர்கள், தமிழ்நாடு அரசின் ஆணை தங்களுக்குப் பொருந்துமா என்கிற எதிர்பார்ப்பிலும், அப்பள்ளியின் நிர்வாகத்தினர் குழப்பத்திலும் இருக்கின்றனர். இதேநிலை தான் வேறு சில மாநிலங்களிலும் நிலவக்கூடும் எனக் கருதுகிறேன்.

எனவே, தமிழ்நாடு அரசின் பாடத்திட்டத்தின்கீழ், கல்வி கற்றுத் தேர்வு எழுதவுள்ள பிற மாநில மாணவர்களின் நலனையும் தமிழ்நாடு அரசு கவனத்தில்கொண்டு, அவர்களுக்கும் பொதுத்தேர்வை முழுமையாக ரத்து செய்வதோடு, அனைவரையும் தேர்ச்சி பெற்றவர்களாகவும் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிக்க வேண்டும் என்று  தெரிவித்துள்ளார்.