சென்னை: நீலகிரி, கோவை மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று வீசும் என்பதால், கடலுக்கு செல்வதை தவிர்க்க மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
சமீப நாட்களாக சென்னை உள்பட தமிழகம் முழுவதும் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் குறைந்த காற்றழுத்த தாழ்வு காரணமாகவும் மழை பெய்து வருகிறது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இன்று தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் மிதமான மழையும், நீலகிரி, கோவை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கனமழையும் பெய்யக் கூடும்.
சேலம், திருவண்ணாமலை, வேலூர், உள்பட 10 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும், அடுத்து வரும் இரண்டு நாட்களுக்கு கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய உள் மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் அடுத்த இரண்டு நாட்களுக்கு பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.