அமராவதி:  திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வரும் பக்தர்களை மிரட்டும் வ்கையில் கடந்த இரு நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால், சாலைகளில் கரைபுரண்டு ஓடும் வெள்ளத்தில் சிலர் சிக்கிய நிகழ்வுகள் நடைபெற்றுள்ளன. இதையடுத்து, கோவிலுக்கு செல்லும் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டு உள்ளது. இதுதொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.

தென்மேற்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை, வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று 19 நவம்பர் 2021 அன்று அதிகாலை 0300-0400 மணிக்கு இடைப்பட  நேரத்தில் புதுச்சேரி மற்றும் சென்னைக்கு இடையே வட தமிழ்நாடு & அதை ஒட்டிய தெற்கு ஆந்திரப் பிரதேச கடற்கரைகளைக் கடந்தது.

இதன் காரணமாக ஆந்திர மாநிலத்தில் நேற்று முதல் மழை கொட்டி வருகிறது. கொட்டித்தீர்க்கும் கனமழையால் திருப்பதி நகரம் முழுவதும் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது.  நேற்று இரவு முதலே அதிதீவிர கனமழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக திருப்பதி திருமலை நகரம் முழுவதும் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. நகரின் முக்கிய சாலைகளிலான யுனிவர்சிட்டி ரோடு, ஏர் பை பாஸ் ரோடு ஆகிய சாலைகளிலும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.

கனமழையால் திருப்பதி மலைக்குப் பாத யாத்திரையாகச் செல்ல பயன்படுத்தப்படும் மலைப் பாதை நேற்று மூடப்பட்டது.. சாலை போக்கு வரத்து மட்டும் இருந்த நிலையில், தொடர் மழை காரணமாக மலைப்பாதையில் பாறை சரிவுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதால் திருப்பதி – திருமலை இடையேயான சாலை போக்குவரத்தும் தற்போது நிறுத்தப்பட்டுள்ளது. திருமலை – திருப்பதி இடையேயான சாலை போக்குவரத்து குறித்து பிறகு அறிவிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பல்வேறு இடங்களில் முக்கிய சாலைகளில் மரங்களும் முறிந்து விழுந்துள்ள நிலையில், வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்தைச் சந்தித்துள்ளனர். கனமழை ரோட்டில் விழுந்து கிடக்கும் மரங்களை அகற்றும் பணிகள் ஒரு புறம் நடந்து கொண்டிருக்கிறது.

முன்னதாக கனமழையால் திருப்பதி மலைக்குப் பாத யாத்திரையாகச் செல்ல பயன்படுத்தப்படும் மலைப் பாதை செவ்வாய்க்கிழமை முதல் மூடப்பட்டுள்ளது. தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் மீட்புப் பணிகளை மேற்கொள்வதில் தொய்வு ஏற்பட்டுள்ளது.  இதற்கிடையே திருப்பதியில் பல இடங்களில் சாலைகளே தெரியாத அளவுக்கு வெள்ள நீர் சூழ்ந்துள்ள படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகியுள்ளது. மேலும், சில இடங்களில் சாலைகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களும் மழை வெள்ளத்தால் அப்படியே அடித்துச் செல்லப்படும் வீடியோக்களும் வெளியாகியுள்ளன. இது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.