சென்னை
டிசம்பர் 4 மற்றும் 5 தேதிகளில் தமிழக தென் மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இன்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில், “மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில், இன்று மிதமான மழை பெய்யும். சென்னை உள்பட மற்ற மாவட்டங்களில் லேசான மழை பெய்யும்.நாளை தென் மாவட்டங்கள், மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதி மாவட்டங்களில் மிதமான மழையும், மற்ற இடங்களில் லேசான மழையும் பெய்யும்.
டிசம்பர் 4, 5 ஆம் தேதிகளில் தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும். வடக்கு கடலோர மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும்.நேற்று காலை நிலவரப்படி, 24 மணி நேரத்தில், மாநிலத்தில் அதிகபட்சமாக, வந்தவாசியில், 9 செ.மீ., மழை பெய்துள்ளது.
இன்று அந்தமான் அருகே நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், நாளை புயலாகவும் மாறும் இது. வரும் 4ம் தேதி, வடக்கு ஆந்திரா மற்றும் ஒடிசா இடையே கரையை நெருங்க வாய்ப்புள்ளது. இதனால், தென் கிழக்கு, மத்திய கிழக்கு வங்கக் கடல், அந்தமான் கடல் பகுதிகளில் இன்றும்; மத்திய வங்கக் கடல், ஆந்திரா, ஒடிசா கடல் பகுதியில் நாளையும், நாளை மறுநாளும் மணிக்கு, 80 கி.மீ., வேகம் வரை சூறாவளிக் காற்று வீசும்.
ஆகவே, மீனவர்கள் இந்த நாட்களில், மேற்கண்ட கடல் பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம். இந்த பகுதிகளில் உள்ளவர்கள் விரைவில் கரை திரும்ப வேண்டும்.” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் வங்கக் கடலில் உருவாகும் புயல் காரணமாக, வடக்கு ஆந்திரா மற்றும் தெற்கு ஒடிசா பகுதிகளுக்கு, நாளை மிகக் கனமழைக்கான ‘ஆரஞ்சு அலர்ட்’ நாளை மறுநாள் ‘ரெட் அலர்ட்’ விடப்பட்டுள்ளது. ஆந்திராவின் காக்கிநாடா, விசாகப்பட்டினம், ஸ்ரீகாகுளம், ஒடிசாவின் பூரி மற்றும் அதன் சுற்றுப்புற மாவட்டங்களுக்கு, இந்த எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. தவிரப் புதுச்சேரியில் இருந்து பூரி வரையிலும் துறைமுகங்களுக்கும் முன்னெச்சரிக்கை அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.