சென்னை: சென்னையில் இன்று முற்பகல் முதல் கடந்த சில மணி நேரமாக விடாமல் மழை கொட்டி வருகிறது. இந்த நிலையில், மேலும் 3 நாட்கள் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையில் இன்று முற்பகல் 11.30 மணி முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. கடந்த 3 மணி நேரத்துக்கும் மேலாக விட்டுவிட்டு கன மழை பெய்து விருகிறது. இதனால் சாலை முழுவதும் தண்ணீரால் சூழப்பட்டு வாகன ஓட்டிகள் சிரமத்துக்கு ஆளாகி உள்ளனர்.
இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன், இன்று கடலோர மாவட்டங்களில் மிதனமானது முதல் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், சென்னை திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, பெரம்பலூர், திருச்சி, அரியலூர், நாகை, திருவாரூர், தஞ்சை, புதுகை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்திற்கு மிதமான மழை தொடரும் என்றும் கூறினார்.
மேலும், நாளை (31ந்தேதி) கடலூர், விழுப்புரம், மயிலாடுதுறை மற்றும் காரைக்கால், புதுச்சேரி உள்பட கடற்கரையோர பகுதிகளில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், ஜனவரி 1ந்தேதி புத்தாண்டு தினத்தன்று மயிலாடுதுறை, விழுப்புரம், செங்கல்பட்டு மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.