விருதுநகர்: தலைமறைவாக உள்ள முன்னாள் அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி குறித்து, அவரது உதவியாளர் சீனிவாச பெருமாள் மற்றும் ஆதரவாளர்களும் கட்சி நிர்வாகிகளுமான கிருஷ்ணராஜா, முன்னாள் எம்எல்ஏ உள்பட மேலும் 5 பேரை பிடித்து தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த அதிமுக ஆட்சியில் பால்வளத் துறை அமைச்சராக இருந்த கே.டி.ராஜேந்திரபாலாஜி மீது அடுத்தடுத்து  ஏராளமான புகார்கள் கூறப்பட்டு வருகின்றன. ஏற்கனவே ஆவினில் அரசு  வேலை வாங்கி தருவதாக கூறி 3 கோடி ரூபாய் பெற்றுக்கொண்டு ஏமாற்றியதாக வழக்கு பதிவு செய்யப் பட்டது. இதுதொடர்பாக சிலரை கைது செய்து விசாரணை நடத்திய காவல்துறை, ராஜேந்திர பாலாஜியையும் கைது செய்து விசாரணை நடத்த முடிவு செய்தது.

இதையடுத்து, ராஜேந்திர பாலாஜி தலைமறைவாக உள்ளார். உச்சநீதிமன்றத்தில் முன்ஜாமின் கோரி மனுத்தாக்கல் செய்துள்ளார். இதையடுத்து, அவரது வங்கி கணக்குகளை முடக்கிய காவல்துறையினர்,  8 தனிப்படை அமைத்து தமிழகம் மட்டுமன்றி கேரளம், பெங்களூர், டெல்லி என பல  இடங்களில் தேடி வருகின்றனர். அவரது உறவினரகள் மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களை கைது செய்து விசாரணை செய்து வரும் நடவடிக்கையும் தொடர்ந்து வருகிறது.

இந்த நிலையில், அதிமுகவைச் சேர்ந்த சாத்தூர் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் ராஜவர்மனிடம் தனிப்படை போலீசார் விசாரணை மேற் கொண்டு வருகின்றனர். அவரிடம் மதுரை டிஐஜி காமினி மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எம். மனோகர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  அதேபோல் முன்னாள் அமைச்சரின் உதவியாளர்  சீனிவாச பெருமாள் மற்றும் ஆதரவாளர்களும் கட்சி நிர்வாகிகளுமான கிருஷ்ணராஜா உள்ளிட்ட மேலும் 5 பேரை பிடித்து தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.