சென்னை: கனமழை எதிரொலியாக, 14 மாவட்ட ஆட்சியர்களுக்கு மாநில பேரிடர் மேலாண்மைத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொள்ளும்படி அறிவுறுத்தி உள்ளது.
இலங்கையை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாகவும், வங்கக்கடலில் நிலைகொண்டு இருக்கும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாகவும் தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் நேற்றிரவு மழை வெளுத்து வாங்கியது. நேற்று இரவு 7 மணிக்கு தொடங்கிய கனமழை இரவு முழுவதும் நீடித்தது. இந்நிலையில் கனமழை காரணமாக சென்னையில் இருவேறு இடங்களில் மின்சாரம் தாக்கி 2 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில், வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, அடுத்த 24 மணிநேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்பு உள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் டிசம்பர் 2-ஆம் தேதி புயலாக வலுவடையும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதனால், டிசம்பர் 2, 3 தேதிகளில் தமிழகத்திற்கு ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அடுத்த 5 நாட்களுக்கு கனமழை நீடிக்க வாய்ப்பு உள்ளது என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதைத்தொடர்ந்து, கனமழை காரணமாக, 14 மாவட்ட ஆட்சியாளர்களுக்கு மாநில பேரிடர் மேலாண்மைத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி, சென்னை, திருவாரூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, வேலூர், மயிலாடுதுறை, நாகை, தஞ்சாவூர், புதுக்கோட்டை , அரியலூர், பெரம்பலூர், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் அதிக கன மழைக்கு வாய்ப்புள்ளதால், தேவையான முன்னெச்சரிக்க நடவடிக்கையை மேற்கொள்ளும்படி மாநில பேரிடர் மேலாண்மை துறை அறிவுறுத்தி உள்ளது.
இது தொடர்பாக தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை செயலாளர் ஆட்சியர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் மழைநீர் வடிகால் பணிகளை முறையாக மேற்கொள்ள வேண்டும். புயலை அடுத்து 14 கடலோர மாவட்டங்களில் உள்ள மக்கள் பாதுகாப்பாக இருக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் மீனவர்கள் கரை திரும்பியதை உறுதி செய்ய வேண்டும். பழைய கட்டடங்களை ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆட்சியர்களுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.