சென்னை: சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தொர்பாக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடியிடம் ஏற்கனவே அமலாக்கத்துறை விசாரணை நடத்திய நிலையில், இன்று மீண்டும் விசாரணைக்கு வரச்சொல்லி சம்மன் அனுப்பப்பட்டது. இதை ஏற்று, அமைச்சர் பொன்முடி இன்று சென்னையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜரானார்.

கடந்த 2006 முதல் 2011 காலகட்டத்தில் கனிமவளத் துறை அமைச்சராக இருந்த அமைச்சர் பொன்முடி, விழுப்புரம் மாவட்டம், பூத்துறை கிராமத்திலுள்ள செம்மண் குவாரியில் அளவுக்கு அதிகமாக செம்மண் எடுத்ததன் மூலம் அரசுக்கு ரூ.28.36 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டதாக புகார் எழுந்தது. இந்த பணத்தை வெளிநாட்டில் முதலீடு செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.  இந்த வழக்கு தொடர்ந்து,  அமைச்சர் பொன்முடியும் அவரின் மகன் கெளதம சிகாமணியிடம் கடந்த ஜூலை மாதம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினார்.

தொடர்ந்து,   அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகனும், நாடாளுமன்ற உறுப்பினருமான கவுதம சிகாமணி ஆகியோருக்கு தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை ரெய்டு நடத்தியது.  அமைச்சர் பொன்முடிக்கு சொந்தமான,  சென்னை, விழுப்புரம் ஆகிய இடங்களில் உள்ள வீடுகள், அலுவலகங்கள் மற்றும் கல்வி நிலையங்கள் உள்ளிட்ட இடங்களில் போலீஸ் பாதுகாப்புடன் சோதனை நடைபெற்றது. தொடர்ந்து அமைச்சர் பொன்முடியை சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு வரவழைத்து, சுமார் 7 மணி நேரத்திற்கும் மேலாக  விசாரணை நடத்ததினர். விசாரணை முடிந்த பிறகு,  அதிகாலை 3 மணியளவில் அமைச்சர் பொன்முடி அங்கிருந்து அனுப்பப்பட்டார்.

இதையடுத்து அடுத்தக்கட்ட விசாரணைக்கு ஆஜராகும்படி, அமைச்சர் பொன்முடி, அவரது மகனும் திமுக எம்.பி.யுமான கவுதம சிகாமணிக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியது. அதன்படி, ஏற்கனவே கவுதம சிகாமணி ஆஜரான நிலையில்,  நவம்பர் 30ந்தேதி ஆஜராகும்படி அமலாக்கத்துறை பொன்முடிக்கு  சம்மன் அனுப்பப்பட்டது.

இதன் காரணமாக, இன்று தமிழக அரசின் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, அவரது வழக்கறிஞருடன் சென்னையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத் தில் ஆஜராகி உள்ளார்.  சென்னை நுங்கப்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் அமைச்சர் பொன்முடி ஆஜராகி உள்ளார். அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.