கோவை: தமிழகத்தில் தொழில் தொடங்க வருபவர்களிடம்  திமுக அரசு 40 % கமிஷன் கேட்கிறது என்றும்,   மாநிலம் முழுவதும் போதைபொருள் விற்பனை அமோகமாக நடைபெறுகிறத என்ற பாஜக மாநில தலைவர்  அண்ணாமலை  குற்றம்சாட்டியுள்ளார்.

மக்களவை தேர்தலையொட்டி, பாஜக கூட்டணி சார்பில், மாநில தலைவரான அண்ணாமலை கோவை தொகுதியில் களமிறங்கி உள்ளார். அங்கு தீவிர பிரசாரம் மேற்கொண்டு வரும் அண்ணாமலை திமுக அரசை கடுமையாக விமர்சனம் செய்தார்.

ஆட்சிக்கு வந்து மூன்று ஆண்டுகளாக, கோயம்புத்தூர் இளைஞர்களின் வேலைவாய்ப்புகள் குறித்துக் கவலையே இல்லாமல் இருந்த தமிழக முதலமைச்சர் ஸ்டாலினுக்கு, தமிழக பாஜக சார்பாக கோவை பாராளுமன்றத் தேர்தல் வாக்குறுதிகளில், கோவையில் செமி கண்டக்டர்கள் தயாரிப்பது குறித்து குறிப்பிட்டதற்குப் பிறகே, கோவை குறித்து ஞாபகம் வந்திருக்கிறது.

தமிழகத்தில் தொழில் முதலீடு செய்ய வருபவர்களிடம், 40% கமிஷன் வழங்க வேண்டும், முதலமைச்சர் மருமகனைச் சென்று நள்ளிரவில் சந்திக்க வேண்டும், முதலமைச்சரின் குடும்ப ஆடிட்டரைச் சந்திக்க வேண்டும் என்றெல்லாம் நிபந்தனைகள் விதித்தால், எந்த நிறுவனம் தமிழகத்தில் முதலீடு செய்ய முன்வரும்? தங்களுக்குச் சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்பளிக்கும் மாநிலங்களில்தான், முதலீடு செய்ய நிறுவனங்கள் முன்வருவார்கள்.

தங்கள் மீது முழுத் தவறையும் வைத்துக்கொண்டு, தேர்தல் நேரத்தில் மட்டும் இளைஞர்கள் மீது அக்கறை இருப்பது போல் நடிக்க வேண்டாம். ஸ்டாலின் அவர்களே. கோவை மட்டுமல்ல, ஒட்டு மொத்த தமிழக இளைஞர்களுக்கும், தொழில்துறையில் திமுக செய்து வரும் துரோகங்களை, ஜூன் 4 பாராளுமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, பாஜக நிச்சயம் சரிசெய்யும்.

பல ஆண்டுகளாகப் புறக்கணிக்கப்பட்டு வரும் கோவையை மீட்டெடுப்பதே எங்கள் முதல் பணியாக இருக்கும் என அண்ணாமலை கூறினார். தொடர்ந்து,  சிங்காநல்லூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட, சுங்கம் மைதானம், நெசவாளர் காலனி, ஆணையங்காடு சாலை, செல்லாண்டியம்மன் கோவில், கள்ளிமடை, நஞ்சுண்டாபுரம் பகுதிகளில் வாக்கு சேகரித்தார். அப்போது,  கடந்த பத்து ஆண்டு கால நல்லாட்சி, ஏழை எளிய மக்கள், தாய்மார்கள், விவசாயிகள், இளைஞர்கள் நலனை முன்னிறுத்தி நடந்த ஆட்சி. வீடற்றவர்களுக்கு மோடி வீடு, ஒவ்வொரு வீட்டுக்கும் குழாயில் சுத்தமான குடிநீர், தூய்மை இந்தியா திட்டத்தில் கழிப்பறை வசதி, முத்ரா கடனுதவி, விவசாயிகளுக்கு கௌரவ நிதி வருடம் ரூ.6,000 என, ஐந்து ஆண்டுகளில் ரூ.30,000, 80 கோடி இந்திய மக்களுக்கு இலவச ரேஷன் பொருள்கள், உலகப் பொருளாதாரத்தில் வேகமான வளர்ச்சி என, நமது நாடு வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது.

நாட்டின் உயரிய பத்ம விருதுகள், சாமானிய மக்களைத் தேடி வருகின்றன. நம் அனைவரையும் பெருமைப்படுத்துகின்றன. இந்திய அரசியலின் அடிப்படை மாறியிருக்கிறது என தெரிவித்தார்.

வரும் பாராளுமன்றத் தேர்தலில், பிரதமர் மோடி, மீண்டும் பிரதமர் பொறுப்பேற்பது, அடுத்த 25 ஆண்டுகளுக்கான வளர்ச்சிக்கு அடித்தளமாக அமையும். எனவே, நமது பிரதமர் 400க்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெற வேண்டும். அதற்கு நமது கோவை தொகுதியும் துணை இருக்க வேண்டும்.

ஆனால், கடந்த 2004 – 2014 வரையிலான பத்து ஆண்டுகளில், பிரதமர் யார் என்றே அறிவிக்காமல், தேர்தல் முடிந்த பிறகு, மன்மோகன் சிங்கை பிரதமராக அறிவித்து, பத்து ஆண்டுகள், ஊழல் செய்து நாட்டைக் கொள்ளையடித்த திமுக, காங்கிரஸ் கூட்டம், மீண்டும் இண்டி கூட்டணி என்ற பெயரில், வந்திருக்கிறது.

தற்போதும் பிரதமர் யார் என்பதை அறிவிக்கவில்லை. பிரதமர் பதவிக்குத் தகுதியானவர்கள், திமுக, காங்கிரஸ் கூட்டணியில் யாரும் இல்லை. திமுக காங்கிரஸ் கூட்டணிக்கு வாக்களிப்பது, நாட்டை மீண்டும் பின்னோக்கிக் கொண்டு சென்று விடும் என தெரிவித்தார்.

திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, தமிழகம் முழுவதும் அதிகரித்துள்ள போதைப் பொருள்கள் விற்பனையால், தங்கள் குழந்தைகளின் எதிர்காலம் குறித்த பயம் பெற்றோர்களுக்கு வந்திருக்கிறது. நமது குழந்தைகளைக் காக்க, பாராளுமன்றத் தேர்தல் முடிவுகள் வெளிவரும் ஜூன் 4ஆம் தேதியிலிருந்து, அடுத்த 100 நாட்களில், மத்திய அரசின் போதைப் பொருள் தடுப்பு அலுவலகம் கோயம்புத்தூரில் அமைக்கப்படும்.

தமிழகம் முழுவதுமே, அரசியல் மாற்றம் வேண்டும் என்று மக்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். வரும் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில், தமிழகத்தில் மக்கள் எதிர்பார்க்கும் நேர்மையான, ஊழலற்ற அரசியல் மலர்ந்திட, இந்தப் பாராளுமன்றத் தேர்தல் அடிப்படையாக அமையும்.

இவ்வாறு பேசினார்.