சென்னை:

வெப்பம் அதிகரித்து வருவதால் சென்னை, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் பகுதிகளில் பாம்புகள் வீடுகளுக்குள் தஞ்சமடைந்து வருகின்றன.


கடந்த ஒரு மாதத்தில் மட்டும் வனத்துறைக்கு பொதுமக்களிடம் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட தொலைபேசி அழைப்புகள் வந்துள்ளன.

இது தவிர திண்டிவனம் மற்றும் விழுப்புரத்திலிருந்தும் ஏராளமான தொலைபேசி அழைப்புகள் வருவதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து ஊர்வன விலங்கியல் நிபுணரும், சென்னை பாம்பு பண்ணை கல்வி அதிகாரியுமான கண்ணன் கூறும்போது, கடும் வெப்பம் ஏற்படும்போது மலை இடுக்குகளுக்குள் பாம்புகள் தங்குகின்றன.

மலை இல்லாத இடங்களில் குளிர்ச்சியைத் தேடி வீடுகளுக்குள் வந்து விடுகின்றன. பாம்புகள் அதிக வெப்பத்தையும், அதிக குளிரையும் தாங்காது.

மலைகள் 20 டிகிரி சென்டிகிரேட் வெப்பத்துடன் நாள் முழுவதும் இருப்பதால், பாம்புகளுக்கு வசதியாகிவிடுகிறது.

இதுதவிர, பறவைகளின் மரப்பொந்துகளில் கூடுகட்டியிருக்கும் வலைக்குள்ளும் சென்று பாம்புகள் தங்கிவிடுகின்றன என்றார்.