இந்து தீவிரவாதம் பேச்சு: கமல்ஹாசன் முன்ஜாமின் கோரி மனு தாக்கல்

மதுரை:

ந்து தீவிரவாதம் குறித்து கமல்ஹாசன் பேசிய பேச்சு நாடு முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அவர்மீது அரவக்குறிச்சி காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தனக்கு முன்ஜாமின் வழங்க வேண்டும் என்றும், தன்மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று நடிகர் கமல்ஹாசன் சென்னை உயர்நீதி மன்றத்தில் அவசர வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

கடந்த 2நாட்களுக்கு முன்பு அரவக்குறிச்சியில் தேர்தல் பிரச்சாரத்தின் போது, இந்து தீவிரவாதம் குறித்து கமல் பேசிய பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அவருக்கு பேச்சு இந்து மத அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்தும், எச்சரித்து வருகின்றன.

இந்த நிலையில், மத உணர்வை புண்படுத்தும் வகையில் பேசுதல், மத ரீதியில் மோதலை தூண்டும் வகையில் பேசுதல் என இரண்டு பிரிவுகளில் கமல் மீது அரவக்குறிச்சி  காவல் நிலையத் தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தன் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டுமெனவும், இதனை அவசர வழக்காக விசாரிக்க கோரியும் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி புகழேந்தி முன்பாக கமல்ஹாசன் சார்பில் முறையிடப்பட்டது.

அப்போது பேசிய நீதிபதி, வழக்கு மற்றும் வழக்கு விசாரணைக்கு தடை கோரும் மனுக்களை விடுமுறை கால அமர்வில் விசாரிக்க இயலாது என்றும் வேண்டுமென்றால், மனுதாரர் முன் ஜாமின் கோரி மனுத்தாக்கல் செய்தால் அதனை பரிசீலிப்பதாக தெரிவித்தார்.

இதையடுத்து, கமல்ஹாசன் தரப்பில் முன் ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு நாளை விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: bail petition, Kamal Haasan, Madurai High Court
-=-