சென்னை: சர்வதேச சதுரங்க கூட்டமைப்பின் துணைத்தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள தமிழகத்தைச் சேர்ந்த புகழ்பெற்ற செஸ் வீரர் விஸ்வநாதன் ஆனந்துக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து உள்ளது. அதில், இது தமிழ்நாட்டுக்கு பெருமையான தருணம் என்று கூறினார்.
சர்வதேச சதுரங்க கூட்டமைப்பின் தலைவர் மற்றும் துணை தலைவருக்கான பதவி காலம் நிறைவடைந்து நிலையில், புதிய தலைவர் மற்றும் துணைத்தலைவரை தேர்வு செய்வதற்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில், சர்வதேச சதுரங்க கூட்டமைப்பின் தலைவராக ஆண்ட்ரிக் டோகோவிச் இரண்டாவது முறையாக மீண்டும் ஒருமித்தமாக தேர்வு செய்யப்பட்டு உள்ளார். துணைத் தலைவராக விஸ்வநாதன் ஆனந்த் தேர்வு செய்யப்பட்டு உள்ளார். அகில இந்திய சதுரங்க கூட்டமைப்பின் சார்பில் பல்வேறு கட்ட பரிந்துரைகள் அடிப்படையில் அவர் தேர்வாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதுதொடர்பான விஸ்வநாதன் ஆனந்துக்கு வாழ்த்து தெரிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ள டிவிட்டில், “சர்வதேச சதுரங்க கூட்டமைப்பின் தலைவ ராக, ஆண்ட்ரிக் டோகோவிச் தேர்வு செய்யப்பட்டதற்கு வாழ்த்துகள். 44வது செஸ் ஒலிம்பியாட் சுமூகமான முறையில் நடைபெறுவதில் அவரது ஆதரவு அளப்பரியது. தலைவராக அவருடைய முதல் பதவிக்காலம் வெற்றிகரமாக அமைந்ததை போல 2-வது பதவிகாலமும் அமையும் என நம்புகிறேன்”என்று பதிவிட்டுள்ளார்.
மற்றொரு பதிவில், செஸ் வீரர் விஸ்வநாதன் ஆனந்த் உலக செஸ் கூட்டமைப்பின் துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு இருப்பதற்கு எனது நெஞ்சார்ந்த வாழ்த்து. இது தமிழ்நாட்டுக்கே பெருமையான தருணம். கிராண்ட் மாஸ்டர் ஆனந்த் போன்ற மாசற்ற நேர்மையும், பரந்த அனுபவமும் கொண்ட ஒருவர் உலக செஸ் கூட்டமைப்பின் துணைத்தலைவராக இருப்பது செஸ் விளையாட்டின் எதிர்காலத்துக்கு நல்லது என்று தெரிவித்துள்ளார்.