நவராத்திரி நாளில் ஒலித்த கதை! : வேதா கோபாலன்

Must read

 
ரண்டு நாட்கள் முன்னரே சொல்ல ஆரம்பித்து உங்களையெல்லாம் ஆர்வத்தில் அப்படியே நிறுத்திவிட்டு நேற்று வேறு விஷயங்கள் பேசிக் கொண்டிருந்துவிட்டேனே..
ஒரு வீட்டில் கொலுவுக்குத் தாம்பூலத்துக்குச் சென்றது பற்றிக் குறிப்பிட்டேன்…
அந்த வீட்டில் அப்படி என்னதான் நடந்தது?
கதை நடந்தது!
கதையா? என்ன கதை?
சொல்கிறேன்.. சொல்கிறேன்…
நாங்கள் கொலுவின் முன் அமர்ந்திருந்தோம். என் பக்கத்தில் அமர்ந்திருந்த பெண் குழந்தைக்கு சுமார் பத்து வயதிருக்கும். கொலுவில்  யாராவது பாடச் சொல்வார்கள் என்ற நப்பாசையுடன், தான் கிளம்பியதிலிருந்தே தயார் செய்துவைத்திருந்த  பாடலை உதடசையாமல் பயிற்சி செய்து பார்த்துக் கொண்டிருந்தாள்.
ஆனால்…
ஒருவர் பேசுவதுகூட மற்றவர்களுக்குக் கேட்க முடியாதபடி அந்த வீட்டின் ஹாலில் …
1
சத்தமாக டி வி ஒலித்துக கொண்டிருந்தது. இத்தனைக்கும் நாங்கள் வந்தபோது டி வி  ஓடிக்கொண்டிருக்கவில்லை.  கொலுவுக்கு வந்திருந்த பெண்மணிகளில் ஒருவர் ”இன்னிக்கு நான் நிலவில் கலந்த நிலா ” சீரியலைப் பார்க்காமயே வந்துட்டோம்.. அதனால் உனக்கு சிரமம் இல்லைன்னா டி வியில் அந்த சானல் போடே முடியுமா? ” என்று கேட்டார். நானும் அதை இயல்பாய் எடுத்துக் கொண்டேன்.
அந்த வீட்டில் இருந்தவர்கள் சிலரும் மற்று  கொலுவுக்கு வந்த பலரும் தொடர் நாடகம் பார்க்கும் வாசை எழுந்தது.
அதை விரும்பாத ஒரே ஒர நபர் நான்தானே! இத்தனைக்கும் நான் ஒன்றும் சீரியல்களின் எதிரி இல்லை. இடம் பொருள் என்று காலம் உணர்ந்திருக்க வேண்டாமா  என்பதுதான் என் ஆதங்கம்.
சளசளவென்று ஒருவரோடு ஒருவர் பேசிக்கொண்டு அந்த நாடகத்தில் அதுவரை நடந்தவற்றைப் பகிர்ந்துகொண்டார்கள்.
சரியான மாலை நேரம்.. விளக்கேற்றும் சமயத்தில் அவர்கள் அந்த நாடகத்தைப் போடவும் அதில் மிகவும் துக்ககரமான ஒரு சம்பவம் காட்டப்பட்டது. விஸ்தாரமாகக் காண்பித்துப் பர பரப்பை ஏற்றியிருந்ததாக அவர்கள் நினைத்தார்கள்.  அமங்கல வார்த்தைகள் வரிசையாக எழுந்தன.எனக்கு மிக வருத்தமாக இருந்தது.
நம்மைச்சுற்றி இருக்கும் எதிர்மறை எண்ணங்களே நம்மையும் சேர்த்துப் பாதிக்கிறது.
எரிச்சலை மறைத்துக்கொண்டு ”நான் கிளம்புகிறேன்” என்று மெல்லச் சொன்னேன்.
அந்த வீட்டு அம்மாள் டிவியைப் பார்த்தவாறு வெற்றிகளை எடுத்து    டிவியைப் பார்த்தவாறு அவற்றுடன் மற்ற பொருட்களைத் தட்டில்  வைத்து டிவியைப் பார்த்தவாறு எனக்குக் கொடுத்தார். நான் போய்விட்டு வருகிறேன் என்று சொன்னதுகூட அவர் காதில் விழுந்ததாகத் தெரியவில்லை. நானாவது பரவாயில்லை. பாட்டுப்பாடும் ஆர்வத்துடன் வந்த அந்தப் பெண்குழந்தை டி வி பார்க்க ஆரம்பித்துவிட்டது.
இதில் ஏற்பட்ட ஒரே நன்மை அவர் சீரியல் துக்கத்துக்கு வருந்தும் சுவாரஸ்யத்தில் பிளாஸ்டிக் டப்பா  கொடுக்க மறந்திருந்தார் என்பதுதான். ஆகவே சிநேகிதிகளே.. தயை கூர்ந்து…. இப்படி ஒரு தவறை   இனி செய்யாதீர்கள்.
இப்போது இன்றைய தினத்தின் அம்பாள் யாரென்று பார்ப்போமா?
பிராஹ்மி தேவியாகி இந்த  அன்னை அன்ன வாகனத்தில் வருவாள். மிக சாந்த ஸ்வருபிணி. இவள் சாகம்பரி என்ற பெயரும் தரித்தவர். இவள் ஸ்ரீவித்யா பீஜாக்ஷர ரூபிணி. அவளின் குணம் ஜெயசுபத்ரா என்பதாகும்.
இவள் நமது நியாயமான விருப்பங்களை நிறைவேற்றுபவள். குடத்தில் சண்டிகா என்ற தேவியாக ஆவாகனம் ஆவாள்.
இவள் செல்வ வளம் நல்குவாள். இன்று பூக்களைக் கொண்டு வட்டவடிவக்கோலம் போட வேண்டும். கலசத்துக்குள் இந்திராக்ஷியாக உறைவாள்.
இன்று நாம் செய்ய வேண்டிய நைவேத்தியம் தேங்காய் சாதம்.
வெள்ளைக் கமலத்தில் இவள் அமர்வாள். சந்தன மணிகளாலான அக்ஷ மாலை தரித்திருப்பாள்.
அவள் செந்தூர நிறை ஆடை அணிந்திருப்பாள்.
நாம் கிளிப்பச்சை நிறச் சேலை அணிந்து பூஜை செய்ய வேண்டும்.
இன்று இசைக்க வேண்டிய ராகம் நீலாம்பரி.
இந்த வகையில் தேவியை பூஜித்து ஜபம் செய்யுங்கள்,  மேலும் இது மகாலட்சுமிக்கான மூன்று நாட்களில் கடைசி நாள் என்பதால் ஸ்ரீ மகாலட்சுமியை மனதாரத் துதித்து ஜபங்கள் செய்து தொழுதால் அவள் நமக்கு என்னதான் தர மாட்டாள்?
மறக்காமல் பூஜை செய்யுங்கள். வளம் அனைத்தும் வசப்படும்.

More articles

Latest article