சென்னை: கொரோனா சிகிச்சை மையங்கள்; தடுப்பூசி, தனியார் மருத்துவ கல்லூரிகளில் கூடுதல் கட்டண வசூல் தொடர்பாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பேட்டி அளித்துள்ளார். அப்போது,  கொரோனா சிறப்பு சிகிச்சை மையங்கள் குறைக்கப்படும் என்றும், தனியார் மருத்துவ கல்லூரிகளில் கூடுதல் கட்டண வசூல் தொடர்பாக கண்காணிக்க தனி குழுக்கள் நியமிக்கப்பட இருப்பதாகவும் தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் இளநிலை மருத்துவப்படிப்புக்கான கலந்தாய்வு முடிவடைந்து நேற்று (14ந்தேதி) முதலாண்டு மருத்துவ படிப்புக்காக கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளன. நடப்பாண்டு தமிழகத்தில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவப்படிப்பில் 6,558 மாணவர்கள் சேர்ந்துள்ளனர்.  இந்த நிலையில், சென்னை மருத்துவ கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்களுக்கான வகுப்பை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்தவர்,  தனியார் மருத்துவ கல்லூரிகளில் கூடுதல் கட்டண வசூல் தொடர்பாக கண்காணிக்க தனி குழுக்கள்  அமைக்கப்பட இருப்பதாக கூறியவர்,  கூடுதல் கட்டணம் வசூலிக்கும் தனியார் மருத்துவக் கல்லூரிகள் மீதான புகாருக்கு பிரத்யேக தொலைபேசி எண் அறிவிக்கப்பட இருப்பதாக வும், மாணாக்கர்களிடம் கூடுதல் கட்டணம் கேட்டால், அதுகுறித்து தொலைபேசி எண்ணுக்கு புகார் அளிக்கலாம் என்று கூறியதுடன்,  அரசு நிர்ணயித்ததை விட கூடுதல் கட்டணம் வசூலிக்கும் தனியார் கல்லூரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்தார்.

தமிழ்நாட்டில் கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வருகிறது. தற்போதைய நிலையில் மாநிலம் முழுவதும்  மருத்துவமனைகளில் இரண்டாயிரத்து 500 பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும், கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த கடந்த 2020ஆம் ஆண்டு கொரோனா முதல் அலையின்போது,  மருத்துவமனை படுக்கைகளின் பற்றாக்குறையை குறைக்க கல்லூரிகள், கூட்ட அரங்குகளில் சிறப்பு சிகிச்சை மையங்கள் ஏற்படுத்தப்பட்டது. கொரோனா மூன்றாம் அலையில் இறப்பு விகிதம் 10 சதவீதம் குறைந்துள்ளது. தற்போது கொரோனா வேகமாக குறைந்து வரும் சூழலில் சிறப்பு சிகிச்சை மையங்களில் எண்ணிக்கையை குறைக்க முடிவெடுத்துள்ளதாகவும்,  தேவை இல்லாத பட்சத்தில் கோவிட் கேர் சென்டர்கள் படிப்படியாக குறைக்கப்படும் என்று கூறியதுடன், கோவிட் கேர் சென்டர்களில் பணிபுரிபவர்கள் பழைய பணிக்கு திரும்புவார்கள் என்றும் தெரிவித்தவர், முக்கவசம் அணிவதை தவிர்க்கக்கூடாது என்றும் அறிவுறுத்தினர்.

தமிழ்நாட்டில் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக கூறியவர், இதுவரை தடுப்பூசி எடுத்துக்கொள்ளாதவர்கள் உடனே தடுப்பூசி எடுத்துக்கொள்ளுங்கள், ஏற்கனவே முதல் டோஸ் தடுப்பூசி எடுத்துக்கொண்டவர்களில்  1.13 கோடி பேர்  இன்னும் 2ம் தவணை தடுப்பூசி போட்டுக்கொள்ளவில்லை. அவர்கள் உடனடியாக தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும். தடுப்பூசி செலுத்திவதில் பொதுமக்கள் அலட்சியம் வேண்டாம் என்றும் தெரிவித்தார்.

தமிழ்நாட்டில், கொரோனா தொற்று தானாக ஏறி தானாக குறையவில்லை என்று தெரிவித்தவர், தமிழக அரசின் நடவடிக்கை மற்றும் மக்களின் ஒத்துழைப்பால்தான் குறைந்தது.

இவ்வாறு அவர் கூறினார்.