சென்னை:

மிழக சுகாதாரத்துறை செயலாளர்  ராதாகிருஷ்ணன் பின்புலம் இருப்பது டிடிவி தினகரன்தான் என்று அதிமுக எம்.பி.க்கள் பரபரப்பு தகவல்களை  தெரிவித்துள்ளனர்.

சிகிச்சைக்காக அப்போலோவில் அனுமதிக்கபட்ட ஜெயலலிதாவை  ஏன் மேல் சிகிச்சைக்காக வெளிநாட்டிற்கு அழைத்து செல்லவில்லை எனறும், அதற்கு காரணம் என்ன என்பது குறித்து உரிய பதில் தேவை என்று அதிமுக எம்.பி.க்கள் வலியுறுத்தி உள்ளனர்.

அதிமுக எம்.பி.க்கள் எம்எல்ஏக்கள்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சுமார் 75 நாட்களாக அப்போலோவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவர் குணமாவி வருகிறார் என்று மருத்துவ மனை நிர்வாகமும், தமிழக அமைச்சர்களும் கூறி வந்த நிலையில், 2016ம் ஆண்டு டிசம்பர் 5ந்தேதி சிகிச்சை பலனின்றி இறந்ததாக அறிவிக்கப்பட்டது.

இது அதிமுகவினர் உள்பட அரசியல் கட்சியினரிடையே பல்வேறு சந்தேகங்களை கிளப்பிய நிலையில், இதுகுறித்து விசாரணை நடத்த ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது.

இந்த விசாரணை கமிஷனில் ஆஜராகி விளக்கம் அளித்த தமிழக சுகாதாரத்துறை செயலாளர், முன்னாள் தலைமை செயலாளர் ராமமோகன்ராவ் போன்றோர் கருத்துக்களில் ஜெ. மரணம் மீண்டும் சர்ச்சையை உருவாக்கி உள்ளது.

விசாரணை ஆணையத்தில் விளக்கம் அளித்த தமிழக அரசின் முன்னாள் தலைமைச் செய லாளர் ராமமோகன்ராவ்.  ஜெயலலிதாவை மேல் சிகிச்சைக்காக வெளிநாடு செல்வது குறித்து அமைச்சரவையில் விவாதிக்கப்பட்டதாகவும் ஆனால் வெளிநாடு கொண்டு சென்று சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் என யாரும் வலியுறுத்தவில்லை என்றும்  தெரிவித்துள்ளார்.

அதுபோல ஜெயலலிதா சுயநினைவுடன் இருந்த வரையில், சிகிச்சைக்காக வெளிநாடு செல்ல விரும்பவில்லை என சுகாதாரத்துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணனும் கூறியிருந்தார்.

இது தமிழகத்தில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், ஐஏஎஸ் அதிகாரிகள் சங்கத்தினர், தமிழக அமைச்சர்களை முதல்வர் கட்டுப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இருந்தனர்.

இந்த நிலையில் அதிமுக எம்பிக்கள் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, ஜெயலலிதாவை சிகிச்சைக்கு வெளிநாட்டுக்கு கொண்டு செல்லத் தேவையில்லை என்ற முடிவை சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் எப்படி, யார் சொல்லி எடுத்தார் என்பதை பகிரங்கப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்த தகவல்களின் அடிப்படையில், சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் சில சந்தேகங்களை எழுப்பியிருக்கிறார். அதற்கு உரிய விளக்கம் அளிப்பதை விடுத்து, அமைச்சர்களை கட்டுப்படுத்த வேண்டும் என ஐஏஎஸ் அசோசியேசன் மூலம் ராதாகிருஷ்ணன் கூறியிருப்பதை ஏற்க முடியாது.

தமிழக சுகாதாரத்துறை செயலாளர்  ராதாகிருஷ்ணன் பின்புலத்தை விசாரிக்க வேண் டும் என அமைச்சர் சி.வி.சண்முகம்  ஏற்கனவே தெரிவித்துள்ளார்… அவருக்கு பின்புலமாக இருப்பது  டிடிவி தினகரன்தான் என்பது சேத்தியாத்தோப்பில் நடைபெற்ற அமமுக கூட்டத்தின் மூலம் வெளிவந்திருப்பதாக கூறிய  அதிமுக எம்.பி. அருண்மொழித் தேவன், அந்த கூட்டத்தில் பேசிய டிடிவி தினகரன், தமிழக அரசு எந்திரத்தின் இதயம் போன்றவர் ராதாகிருஷ்ணன் என கூறினார் என்றும் சுட்டிக்காட்டினார்.

தொடர்ந்து பேசிய காட்டுமன்னார்கோவில் எம்எல்ஏ முருகுமாறன், இதயத்தில் நோய் ஏற்படும் போது அதற்குரிய சிகிச்சை செய்வதில்லையா என கேள்வி எழுப்பினார்.

அதையடுத்து பேசிய திருத்தணி ஹரி  எம்.பி., தமிழகத்திலும், இந்தியாவிலும் நல்ல மருத்து வர்கள் இருக்கிறார்கள் என்பதால் ஜெயலலிதாவை சிகிச்சைக்கு வெளிநாட்டுக்கு கொண்டு செல்லத் தேவையில்லை என்ற முடிவை ராதாகிருஷ்ணன் எப்படி, யார் சொல்லி எடுத்தார் என்பதை பகிரங்கப்படுத்த வேண்டும் என்றும்  கோரிக்கை விடுத்தார்.

தொடர்ந்து பேசிய குன்னம் தொகுதி எம்எல்ஏ ராமச்சந்திரன்.  சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் கூறியதுபோல சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் விசாரிக்கப்பட வேண்டும் என்று  வலியுறுத்தினார்.

மேலும் தமிழகஅமைச்சர்களுக்கு எதிராக புகார் அளித்துள்ள ஐஏஎஸ் அதிகாரிகள் சங்கம்  பதிவு பெற்ற சங்கமா.? என்றும், அம்மா அவர்களால் பத்து வருடங்கள் ஒதுக்கிவைக்கப்பட்ட டிடிவி தினகரன், அம்மா அவர்கள் இறந்ததற்குப் பிறகு டிடிவி தினகரன் அரசியலுக்கு வருகிறார்.

இப்படி இவர்கள் செய்தது அம்மாவின் சாவில் இவர்களுக்கு தொடர்பு இருக்கிறது என்பது சாதாரண தொண்டனுக்கும் சந்தேகம் எழுந்திருக்கிறது உண்மை.

இப்படிப்பட்ட நிலையில் சேத்தியாத்தோப்பில் நேற்று 6.1.2019. பேசிய தினகரன் ராதாகிருஷ்ணன் நல்ல அதிகாரி என்று பேசியிருக்கிறார். இதன்மூலம் அம்மாவின் சாவில் சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோருக்கு தொடர்பிருப்பதை ராதாகிருஷ்ணன் மறைத்து அவர்களுக்கு ஆதரவாக ஆணையத்தில் வாக்குமூலம் கொடுத்து இருப்பதால்தான,  தினகரன், ராதாகிருஷ்ணனுக்கு நல்ல அதிகாரி என்ற பட்டத்தை கொடுத்திருக்கிறார். இதன்மூலம் பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டதைத்தான் காட்டுகிறது.

மூத்த அமைச்சர்கள் முன்னாள் அமைச்சர் வைத்தி அவர்களைப்பற்றி கூட மிகவும் தரக்குறை வாக கேவலமாக தினகரன் அந்த கூட்டத்தில் பேசியிருக்கிறார். ஒரு கட்டத்தில் கடலூர் அமைச்சர் எம்.சி. சம்பத் இந்த மாவட்டத்தில்தானே இருக்க வேண்டும் இந்த வழியாகத்தானே கும்பகோணம் வரவேண்டும் இந்த ஊர் மக்கள் எல்லாம் எந்த மரத்தையும் விட்டுவைக்காத போராட்டத்தை செய்தவர்கள் அப்படிப்பட்டவர்கள் எம்.சி. சம்பத்தை சும்மா விடமாட்டார்கள் என்று வன்முறையை தூண்டும் விதமாக தினகரன் பேசியிருக்கிறார்.

அவர் ஒரு அரசியல்வாதியோ தலைவரோ அல்ல. இப்படி பேசியிருப்பதன் மூலம் ஒரு பெருத்த சமுதாயத்தை “மரம் வெட்டிகளாக” இழிவுபடுத்தி, தினகரன் பேசியிருப்பது. இந்த சமுதாயத்தை இழிவுபடுத்தி பேசி இருப்பதாகவே இந்த சமுதாய மக்கள் கருதுவார்கள். ஆக ஒரு பெரிய சமுதாயத்தை கொச்சைப்படுத்தி பேசிய தினகரனை வன்மையாக கண்டிக்கிறோம் என்றவர்கள், அ.தி.மு.க. எந்த சாதியையும ஆதரிக்காது.

இது அனைத்து சமுதாயத்திற்கும் பொதுவான இயக்கம். அம்மாவின் சாவில் மர்மம் இருக்கிறது அது சசிகலா குடும்பமும் தினகரனும் மன்னார்குடி கும்பலும் சேர்ந்த செய்த சதிதான் என்பது கூடிய விரைவில் வெளிப்படும். என்றார்கள்.

மேலும், தமிழக  சுகாதாரத்துறை செயலாளராக இருக்க ராதாகிருஷ்ணன் தகுதியற்றவர் என்றோ, ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் நம்பிக்கை இல்லை என்றோ தாங்கள் கூறவில்லை என்றவர்கள்,  ஜெயலலிதாவை வெளிநாட்டுக்கு சிகிச்சைக்கு கொண்டு செல்ல மறுத்தது யார் என்பதை ராதாகிருஷ்ணன் வெளியே சொல்ல வேண்டும் என்றுதான் தாங்கள் வலியுறுத்துவதாக தெரிவித்தனர்.

அதிமுக எம்.பிக்கள், எம்எல்ஏக்கள்  முருகுமாறன், ராமசந்திரன், பாண்டியன், சத்தியா பன்னீர்செல்வம், எம்.பி.க்கள் அருண்மொழித்தேவன், ஹரி, பா.குமார் உள்பல பலர் கூட்டடாக செய்தியாளர்களை சந்தித்தனர்.