சென்னை:

மக்கள் நல பிரதிநிதிகளான எங்களை அச்சுறுத்துவதா? என  ஐஏஎஸ் அதிகாரிகள் சங்கத்துக்கு அமைச்சர் சிவி சண்முகம் மிரட்டல் விடுத்துள்ளார். மக்கள் பிரதிநிதிகளை அச்சுறுத்தும் விதமாக பேசுவதை ஐஏஎஸ் அதிகாரிகள் திருத்திக் கொள்ள வேண்டும் என்றும் எச்சரித்துள்ளார்.

மறைந்த ஜெயலலிதாவுக்கு ஏன் வெளிநாட்டு சிகிச்சைஅளிக்கப்படவில்லை என்பது குறித்து கடந்த சில நாட்களாக தமிழகத்தில் பல்வேறு கருத்துக்கள் கூறப்பட்டு வருகின்றன. தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், ஜெ. வெளிநாட்டுக்கு சிகிச்சைக்கு செல்ல விரும்பவில்லை என்று விசாரணை ஆணையத்தில் தெரிவித்ததாக கூறப்பட்டது.

இது சலசலப்பை  ஏற்படுத்தியது. இதுகுறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பிய தமிழக சட்ட அமைச்சர் சி.வி. சண்முகம், வெளிநாட்டிற்கு சிகிச்சைக்கு அழைத்துச் செல்லாதது குறித்தும், இந்த விவகாரத்தில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பின்னணி குறித்தும் விசாரிக்க வேண்டும் என்றும்  வலியுறுத்தியிருந்தார்.

இது ஐஏஎஸ் அதிகாரிகளிடையே அதிருப்தியை உருவாக்கியது. இதையடுத்து, ஐஏஎஸ் அதிகாரி கள் சங்கம் சார்பில், அமைச்சர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில்  தீர்மானம் நிறைவேற்றி தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதனுக்கு அனுப்பி வைத்தனர். அதில், அமைச்சர்களை, முதலமைச்சர் கட்டுப்படுத்தி வைக்க வேண்டும் என வலியுறுத்தியிருந்தனர். இந்த விவகாரம் பிரச்சினை மேலும் வலுவாக்கி உள்ளது.

இந்த நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சி.வி.சண்முகம்,  குற்றச்சாட்டு என வந்துவிட்டால் யாரை வேண்டுமானாலும் கேள்வி கேட்கலாம்.  ஆனால் மக்கள் பிரதிநிதி களை அச்சுறுத்தும் விதமாக கருத்துக் கூறுவதை ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் திருத்திக் கொள்ள வேண்டும் என்று எச்சரித்தார்.

தான் ஏற்கனவே  ஆறுமுகசாமி ஆணையமும், பல்வேறு தரப்பினரும் எழுப்பிய சந்தேகங்களை யும், கேள்விகளையும்தான் சுட்டிக்காட்டினேன். எனது  கேள்விக்கு பதில் சொல்ல முடியாத வர்கள், அரசு அதிகாரிகளை இவ்வாறு கேள்வி கேட்கலாமா என்று, எதிர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

குற்றச்சாட்டு என வந்துவிட்டால் யாரை வேண்டுமானாலும் கேள்வி கேட்கலாம் என்றவர், , அமைச்சர் களை கட்டுக்குள் வைக்க வேண்டும் எனக் கூறுவதும், மக்கள் பிரதிநிதிகளை அச்சுறுத்தும் விதமாக பேசுவதையும் ஐஏஎஸ் அதிகாரிகள் திருத்திக் கொள்ள வேண்டும் என்றும் எச்சரித்தார்.

மேலும், டிடிவி தினகரன் குறித்து விமர்சித்த அமைச்சர் ஒரு திருடன்  மற்றொரு திருடனுக்கு சாட்சி சொல்கிறார் என்றும்,  வாய்க்கு வந்ததை எல்லாம்  பேசி வருகிறார் என்றும் தெரிவித்தார்.