சென்னை: தமிழகத்தில் 108 ஆம்புலன்ஸ் வாகனங்களின் செயல்பாடு குறித்து ஆய்வு மேற்கொள்ள சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.

செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் இன்று 108 ஆம்புலன்சில் பொருத்தப்பட்டிருந்த ஆக்சிஜன் சிலிண்டர் வெடிக்க, வாகனம் முழுக்க எரிந்து சேதம் அடைந்தது.

போதிய பராமரிப்பு நடவடிக்கைகள் இல்லை என்பதால் இதுபோன்ற விபத்துகள் தொடர்ந்து ஏற்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதுபோன்ற விபத்து நடப்பதற்கு முன்பு சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளார்.

அதில் கூறப்பட்டு உள்ளதாவது: கொரோனா காலத்தில் ஆம்புலன்சுகளை முறையாக கவனிக்க நேரமில்லாதததால், இதுபோன்ற தொடர் விபத்துகள் ஏற்பட்டுள்ளன. இனி வரும் காலங்களில் இவ்வாறு விபத்துகள் ஏற்படுவதை முற்றிலுமாக தவிர்க்கப்பட வேண்டும்.

எனவே மாதந்தோறும் ஆம்புலன்சுகளை சரியாக பராமரிக்க வேண்டும். பராமரிப்பு அறிக்கை மாதந்தோறும் தமக்கு அளிக்கப்படவேண்டும் என்று அந்த உத்தரவில் கூறி உள்ளார். 108 ஆம்புலன்சுகளின் முதன்மை செயலாளர் செல்வகுமார் தலைமையில் அறிக்கையை கண்காணிக்க ஒரு குழுவும் அமைக்கப்பட்டுள்ளதாக அந்த உத்தரவில் ராதாகிருஷ்ணன் கூறி உள்ளார்.