புதுடெல்லி:
கொரோனா தடுப்பு விதிகளை மக்கள் பின்பற்றாவிட்டால் மீண்டும் தீவிர ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என மத்திய சுகாதாரத்துறை இணைச்செயலர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய மத்திய சுகாதாரத்துறை இணைச்செயலர் லாவ் அகர்வால் தெரிவித்ததாவது:

தமிழகத்தில் 15 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ளது. நாட்டின் 80% கொரோனா பாதிப்பில் மகாராஷ்டிரா, தமிழகம் உள்பட 14 மாநிலங்களின் 90 மாவட்டத்தில் பதிவாகியுள்ளது.

கொரோனாவில் இருந்து குணமடைவோர் விகிதம் 97.2% ஆக உள்ளது. மலைப்பிரதேசங்களுக்கு பயணம் செய்வோர் கொரோனா தடுப்பு நெறிமுறைகளை பின்பற்றுவதில்லை. சிம்லா, மணாலி போன்ற மலைப்பிரதேசங்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியதை சுட்டிக்காட்டி பேசினார். தொடர்ந்து பேசிய அவர்; அண்மையில் மேற்கொண்ட ஆய்வில் நாட்டில் 24% பேர் முகக்கவசம் அணியவில்லை என தெரியவந்துள்ளது. 45% முறையாக முகக்கவசம் அணிவதில்லை; 63 பேர் தனிநபர் இடைவெளியை கடைபிடிப்பதில்லை.

25% பயணங்களின் போது கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றுவதில்லை. கொரோனா தடுப்பு விதிகளை மக்கள் பின்பற்றாவிட்டால் மீண்டும் தீவிர ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்

இவ்வாறு அவர் தெரிவித்தார்.