டில்லி

ஜே இ இ முதன்மை தேர்வுகளின் மூன்றாம் மற்றும் நான்காம் கட்ட தேர்வு தேதிகள்  அறிவிக்கப்பட்டுள்ளன.

ஜே இ இ எனப்படும் ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வு கடந்த மே மாதம் நடைபெற இருந்தது.  இந்த தேர்வில் பொறியியல் படிப்புக்கான தேர்வுகள் மூன்றாம் மற்றும் நான்காம் கட்டமாக நடைபெற இருந்தன.  ஆனால் கொரோனா பரவல் அதிகமாக இருந்ததால் தேர்வுகள் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டன.

தற்போது கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்துள்ளதால் இன்று மாலை 7 மணிக்கு இந்த தேர்வுகள் நடைபெறும் தேதிகள் குறித்த அறிவிப்பு வெளியாகும் என மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் போக்ரியால் நிஷாங்க் அறிவித்திருந்தார்.   அதன்படி சற்று முன்பு அவர் தேதிகளை அறிவித்துள்ளார்.

இதில் ஜே இ இ முதன்மை தேர்வில் மூன்றாம் கட்ட தேர்வுகள் ஜூலை 20 முதல் 25 வரையிலும் நான்காம் கட்ட தேர்வுகள் ஜூலை 27 முதல் ஆகஸ்ட் 2 வரை நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.  மேலும் இந்த தேர்வுகளுக்குப் பதிவு செய்யாத மாணவர்கள் மூன்றாம் கட்ட தேர்வுக்கு ஜூலை 6 முதல் 8 வரையிலும், நான்காம் கட்ட தேர்வுக்கு ஜூலை 9 முதல் 12 வரையிலும் பதியலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.

தேர்வு எழுதுவோர் தங்களது தேர்வு மையத்தை மாற்றிக் கொள்ளலாம் எனவும் அவரவர் விருப்பத்துக்கு ஏற்ப தேர்வு மையத்தை ஒதுக்கீடு செய்யக் கூடியவரை முயற்சி எடுக்கப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.  மேலும் கொரோனா பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகளுக்கேற்ப தேர்வு மையங்கள் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் அறிவித்துள்ளார்.