சென்னை:
குற்றச்செயலில் ஈடுபட்டவரை தனது மகன் என சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பப்பட்டு வருவதாகவும், அவருக்கும் தனக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்று மறுப்பு தெரிவித்து உள்ள தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், தகுந்த நடவடிக்கை எடுக்க கோரி காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளார்.
‘சென்னையில் ஈசிர் ரோட்டில் நேற்று முன்தினம் நள்ளிரவில் முழு போதையில் சொகுசு காரை ஓட்டிவந்த இளைஞர் ஆட்டோ ஒன்றின்மீது மோதினார், அப்படியும் நிற்காமல் வேகமாக ஓட்டிச் சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து சுவற்றின்மீது மோதி டநின்றது. இதில் அதிர்ஷ்டவசமாக அங்கு யாரும் இல்லாததால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
இதைக்கண்ட இரவு ரோந்து காவல்துறையினர் அவரை பிடிக்க முயல, காரை ஓட்டி வந்த நபர் மதுபோதையில் காவலர்களை தாக்கி தரக்குறைவாக திட்டினார். காவலர்களை அடிக்க முயன்றார். இது தொடர்பான வீடியோ வைரலானது.
விசாரணையில், போதையில் ஓட்டி வந்தவர் பெயர் நவீன் (வயது 30) என்பதும், பழங்கள் ஏற்றுமதி செய்யும் தொழிலதிபர் என்பதும் தெரிய வந்தது. பின்னர் அவர் கைது செய்யப்பட்டார்.
காவல்துறையினர் காரில் இருந்த நபரை விசாரிக்க முற்பட்டபோது, அவர் மிதமிஞ்சிய மதுபோதையில் இருந்தது தெரியவந்தது. காரிலிருந்து வெளியே வந்த அவர், காவல்துறை யினரை வாய்க்கு வந்தபடி ஆபாசமாகத் திட்டித் தீர்த்தார். அவர்களைத் தாக்கவும் முற்பட்டார்.
இதனையடுத்து அவரை கைது செய்த நீலங்கரை காவல் துறையினர், 4 பிரிவின்கீழ் வழக்குப்பதிவு செய்தனர். அதுமட்டுமில்லாமல் போதையில் கார் ஓட்டி விபத்து ஏற்படுத்தியதால் அவரது ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்யுமாறு வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு போலீசார் பரிந்துரை செய்தனர்.
இது தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியானது. அதைக்கண்ட பலர், குடி போதையில் காவலர்களை தாக்க முயற்சிப்பவர் தமிழக சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகத்தின் மகன் என கூறி சமூகவலைதளத்தில் பகிர்ந்துள்ளனர். இது வைரலானது.
இதுகுறித்து தகவல் அறிந்த அமைச்சர் சி.வி.சண்முகம் அதிர்ச்சி அடைந்த நிலையில், தனது வழக்கறிஞருடன் சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதனை சந்தித்து புகார் அளித்தனர்.
அவரது புகார் மனுவில் சமூகவலைதளத்தில் அவரது மகனைப்பற்றி பரவும் வதந்தி செய்திகளை குறிப்பிட்டு, குற்றச்சம்பவத்தில் ஈடுபட்டு கைதான நபரின் காணொலியை வெளியிட்டு தனது மகன் என சமூக வலைதளங்களில் அவதூறு பரப்புகிறவர்கள்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி உள்ளார்.
காவல்துறை விளக்கம்:
அமைச்சர் சிவி சண்முகத்தின் புகாரை தொடர்ந்து காவல்துறை சார்பில் விளக்கம் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
குடிபோதையில் காவலர்களிடம் தகராறு செய்தது அமைச்சரின் மகன் என தவறான செய்தி பரவி வருவதாகவும், அவ்வாறு தகராறு செய்தது திருவான்மியூரைச் சேர்ந்த நவீன் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குடிபோதையில் வாகனத்தை அஜாக்கிரதையாக இயக்கி, காவலரிடம் தகராறு செய்த நவீன் மீது வழக்குப்பதிவு செய்து, அவரை சிறையில் அடைத்துள்ளதாக குறிப்பிட்டுள்ள காவல்துறை, நவீனுக்கும், அமைச்சர் சி.வி.சண்முகத்திற்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என விளக்கம் அளித்துள்ளது.