சென்னை:

மிழகத்தில் மத்திய அரசு செயல்படுத்தி வரும் ஹைட்ரோகார்பன் திட்டம், மீத்தேன் திட்டம் போன்றவை காரணமாக தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் ஜூலை 25, மற்றும்  26ந்தேதி  தமிழக விவசாயிகள் டில்லியில் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.

ஜூலை 25-ந்தேதி நாடாளுமன்றம் முன் உண்ணாவிரதம் இருக்கவும், 26ந்தேதி நாடாளு மன்றத்தை முற்றுகையிடும் போராட்டமும் நடத்தப்போவதாக தமிழக விவசாய ஒருங்கிணைப் புக் குழுவின் தலைவர் பி.ஆர். பாண்டியன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு மத்திய அரசு அனுமதி வழங்கிய நிலையில், அந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில்,  தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட வேண்டும், காவிரி டெல்டா மண்டலத்தைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அனைத்து விவசாயிகள் அமைப்புகளின் ஒருங்கிணைப்புக் குழு சார்பில் டில்லியில் மத்தியஅரசுக்கு எதிராக  போராட்டம் நடத்தப்பட உள்ளது.

இதுதொடர்பாக பிரதமர் அலுவலகத்தில் தமிழக அனைத்து விவசாயிகள் அமைப்புகளின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் மனு அளித்துள்ளார்.

அதில்,  காவிரி டெல்டா பகுதியில் சுமார் 25 லட்சம் ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. அதில் நஞ்சை, புஞ்சை என இரு போகம் சாகுபாடி செய்யப்படுகிறது. நெல் மட்டும் சுமார் 18 லட்சம் ஏக்கரில் பயிரிடப்படுகிறது. இது தவிர, வாழை, தென்னை, கரும்பு, மா, பலா, வேர்க்கடலை, எள் போன்றவையும் பயிரிடப்படுகின்றன. விவசாயத்தை நம்பி 3 கோடி விவசாயிகளும், விவசாயத் தொழிலாளர்களின் வாழ்வாதாரமும் உள்ளது.

தமிழக அரசின் பொது விநியோகத் திட்டத்தில் கீழ் கொள்முதல் செய்யப்படும் உணவு தானியங் களில் 40 சதவீதம் காவிரி டெல்டா பகுதியில் விளைபவையாகும். வரலாற்று ரீதியாகவும் காவிரி டெல்டா ஆற்று பாசனப் பகுதியாக இருந்து வருகிறது. இந்நிலையில், விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் தொடங்கி கடலூர், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாத புரம், புதுச்சேரி காரைக்கால் ஆகிய பகுதிகளில் ஹைட்ரோ கார்பன், மீத்தேன், இயற்கை எரிவாயு உள்ளிட்டவற்றுக்காக சுமார் 6 ஆயிரம் சதுர கி. மீட்டரில் முதல் கட்டமாக 274 கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளன. இதற்காக வேதாந்தா, ஒஎன்ஜிசி, ரிலையன்ஸ் போன்ற நிறுவனங்களுடன் மத்திய அரசு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.

இத்திட்டம் செயல்படுத்தப்பட்டால், நிலத்தடி நீர் முழுமையாக உறிஞ்சப்பட்டு, குடிநீர் பற்றாக்குறை ஏற்படும்.  மேலும், இத்திட்டத்தால் ஆறு, கால்வாய், ஏரி, விவசாய நிலங்கள், நீர் ஆதாரங்கள் ஆகியவற்றில் கழிவுகள் கலக்கும் போது, குணப்படுத்த முடியாத நோய்கள் உருவாகும்; உயிரிழிப்புகளும் ஏற்படும். காவிரி டெல்டா மாவட்டங்களில் கட்டப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான வரலாற்று நினைவுச் சின்னங்களுக்குப் பாதிப்பு ஏற்படும். இத்துடன், கடற்கரையோரப் பகுதிகளில் வசிக்கும் சுமார் 50 லட்சம் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிப்புக்குள்ளாகும்.

மீன் ஏற்றுமதியும் பாதிக்கப்படும். காவிரி டெல்டாவே பாலைவனமாக உருவாகிவிடும். எனவே, தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்காக மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தை கைவிட வேண்டும். காவிரி டெல்டா மண்டலத்தை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும்.

இவ்வாறு  மனுவில் கூறப்பட்டுள்ளது.