சென்னை

ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லம் தொடர்பாகத் தொடரப்பட்ட வழக்கு செல்லாது எனச் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

கடந்த 2017 ஆம் ஆண்டு மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வேதா நிலையம், நினைவு இல்லமாக மாற்றப்படும் என அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். இதையொட்டி, வேதா நிலையத்தை அரசுடைமையாக்கி, கடந்த 2020 ஆம் ஆண்டு ஜூலை மாதம் தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.

தமிழக அரசு ஜெயலலிதாவின் வருமானம் மற்றும் சொத்து வரி நிலுவைத் தொகை உட்பட 69 கோடி ரூபாயை வைப்புத் தொகையாக, சென்னை மாவட்ட முதன்மை உரிமையியல் நீதிமன்றத்தில் செலுத்தியது. இதில் இருந்து, ஜெயலலிதாவின் வருமான வரிப் பாக்கி 36.9 கோடி ரூபாயை எடுக்க வருமான வரித்துறைக்குத் தடை விதிக்கக் கோரி, ஆம் ஆத்மி கட்சியின் தமிழக தலைவர் வசீகரன் கடந்த 2020ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

அவர் அரசு ஏற்கனவே ஜெயலலிதாவிற்காக 50.80 கோடி ரூபாய் செலவில் நினைவிடம் கட்டி வருவதாகவும், கொரோனா காலகட்டத்தில் நிதி நெருக்கடியில் இருக்கும் அரசு, மக்கள் வரிப் பணத்தை ஜெயலலிதாவின் வரி பாக்கிக்காகச் செலவிடுவது தவறு எனவும் தெரிவித்திருந்தார்.

அரசு வேதா இல்லத்திற்காகச் செலுத்திய தொகையைத் திரும்பப் பெறவும், அதனைக் கையகப்படுத்தும் நடவடிக்கையைக் கைவிடவும் முடிவு செய்திருப்பதாகத் தெரிவித்தது, அந்த தொகையை வட்டியுடன் திருப்பி செலுத்த நீதிமன்ற பதிவாளருக்கு உத்தரவிட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தது.

நீதிபதியின் உத்தரவின்படி, நீதிமன்ற பதிவாளர் கணக்கில் வைப்பு செய்யப்பட்டிருந்த தொகை, வட்டியுடன் சேர்த்து மொத்தம் 70 கோடியே 40 லட்சத்து 87 ஆயிரத்து 713 ரூபாயாகச் சென்னை வருவாய்க் கோட்டாட்சியரின் கணக்குக்குத் திருப்பி செலுத்தப்பட்டது.

இன்று சென்னை உயர்நீதிமன்றம் ஆம் ஆத்மி கட்சியின் தமிழக தலைவர் வசீகரன் தொடர்ந்த வழக்கை முடித்து வைத்தது. நீதிபதிகள், தங்கள் தீர்ப்பில் ஜெயலலிதாவின் வேதா நிலையம் இல்லத்தைக் கையகப்படுத்தச் செலுத்திய இழப்பீட்டு தொகையிலிருந்து வருமான வரி பாக்கி செலுத்தத் தடை கோரிய வழக்கு செல்லத்தக்கதல்ல என்று கூறி வழக்கை முடித்து வைத்துள்ளனர்