டெல்லி:
ஆர்.எஸ்.எஸ். பேரணி அனுமதி உத்தரவுக்கு எதிராக தமிழ்நாடு அரசு தொடர்ந்த மேல்முறையீட்டு மனு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது.
கடந்த 2022ம் ஆண்டு அக்டோபர் 2 ஆம் தேதி காந்தி ஜெயந்தி நாளன்று தமிழகத்தில் பேரணி நடத்த ஆர்.எஸ்.எஸ். திட்டமிருந்த நிலையில், அதற்கு காவல் துறை அனுமதி மறுத்து இருந்தது. இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், கோவை, பொள்ளாச்சி உள்ளிட்ட 6 இடங்கள் தவிர காவல்துறை அனுமதி வழங்கிய 3 இடங்கள், உள்ளிட்ட 44 இடங்களில் ஆர்.எஸ்.எஸ். பேரணி நடத்தலாம். 6 இடங்களில் மட்டும் இயல்பு நிலை திரும்பும்வரை ஆர்.எஸ்.எஸ். காத்திருக்க வேண்டும் என நீதிமன்றம் தெரிவித்திருந்தது.
ஆனால், அதற்கும் காவல்துறை அனுமதி மறுத்து நீதிமன்றத்தில் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்ய கோரியது. அதை விசாரித்த நீதிபதி, நான்கு சுவருக்குள் பேரணி நடத்தலாம் என ஒரு தீர்ப்பை வழங்கினார். இந்த தீர்ப்பு கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தியது.
இதை எதிர்த்து, ஆர்எஸ்எஸ் தரப்பில் உயர்நீதிமன்ற அமர்வில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கின் பல்வேறு கட்ட விசாரணைகளைத் தொடர்ந்து,. மார்ச் 5 ஆம் தேதி அணிவகுப்பிற்கு அனுமதி வழங்க வேண்டும் என நீதிமன்றம் அதிரடியாக உத்தரவு பிறப்பித்தது.மேலும். ஆர்.எஸ்.எஸ். பேரணியை சுற்றுச்சுவருடன் கூடிய திடலில் நடத்த வேண்டும் என தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்தும் உத்தரவிட்டது.
ஆர்எஸ்எஸ் பேரணிக்கு மீண்டும் விண்ணப்பிக்கலாம் என்றும், அவ்வாறு விண்ணப்பித்தால் சட்டப்படி பரிசீலனை செய்து முடிவெடுக்க காவல் துறைக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. கருத்துரிமை, பேச்சுரிமையை தடுக்காத வகையில் அரசு செயல்பட வேண்டும் என்றும், கடும் கட்டுப்பாடுகளுடன் ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு அனுமதி வழங்கலாம் எனவும் நீதிமன்றம் குறிப்பிட்டது.
இந்த நிலையில், ஆர்.எஸ்.எஸ். பேரணி அனுமதி உத்தரவுக்கு எதிராக தமிழ்நாடு அரசு தொடர்ந்த மேல்முறையீட்டு மனு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது.