டெல்லி: முகக்கவசம் பயன்படுத்துவது தான் இப்போதைக்கு கொரோனாவை தடுக்கும் தடுப்பு மருந்து என்று பிரதமர் மோடி கூறி உள்ளார்.

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க பல மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான  தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பி இருக்கின்றனர். அவர்கள் தற்போது வேலையின்றி வறுமையில் வாடுகின்றனர்.

அவர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் திட்டத்தை மத்திய அரசு அறிவித்தது. உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் புலம் பெயர் தொழிலாளர்களுக்கு இந்த வேலைவாய்ப்பு திட்டத்தை வீடியோ கான்பிரன்சிங் முறையில் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

அப்போது அவர் பேசியதாவது: கொரோனா வைரசுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கும் வரை நாம் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும். முகக்கவசம் பயன்படுத்த வேண்டும்.

தொற்றுநோயை தடுக்க ஒரே வழி, தனிநபர் சுகாதாரம் பேணுதல், கைகளை தவறாமல் சோப்பு போட்டு கழுவுதல், வீட்டை விட்டு வெளியே செல்லும்போது முகக்கவசம் அணிவது, சமுக இடைவெளியை கடைபிடிப்பது.

இங்கிலாந்து, பிரான்ஸ், இத்தாலி மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகள் ஒரு காலத்தில் உலகை வென்றன. இந்த நாடுகள் உலகின் மிகப்பெரிய சக்திகளாக இருந்தன. ஆனால் இந்த நாடுகளின் மக்கள்தொகையை நீங்கள் சேர்த்தால் அது 24 கோடிக்கு வருகிறது.

ஆனால் இந்தியாவில், உ.பி. மக்கள் தொகை 24 கோடி. கொரோனா தொற்று  காரணமாக 4 ஐரோப்பிய நாடுகளும் சேர்ந்து 1,30,000 பேர் இறந்தனர் என்பதிலிருந்து உத்தரப்பிரதேசம் எவ்வளவு பயனுள்ளதாக இருக்கிறது என்பதைக் காணலாம்.

உத்தரப்பிரதேசத்தில், இறப்புகளின் எண்ணிக்கை 600 ஆகும். உத்தரப்பிரதேசம் இந்த பிரச்சினையை விரைவாகவும் திறமையாகவும் கையாண்டு வருவதை இது காட்டுகிறது. ஆனால் மரணம் மரணம் தான். ஒவ்வொருவரின் வாழ்க்கையும் முக்கியமானது. ஏராளமான உயிர்களும் இழந்துவிட்டன என்பது வருத்தமாக இருக்கிறது, அது இந்தியாவிலோ அல்லது உலகின் வேறு இடத்திலோ இருக்கலாம் என்று பேசினார்.